search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானாவில் 120 பெண்களை கற்பழித்த மடாதிபதி - தன் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு
    X

    அரியானாவில் 120 பெண்களை கற்பழித்த மடாதிபதி - தன் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு

    அரியானா மாநிலத்தில் 120 பெண்களை கற்பழித்த பிரபல மடாதிபதி கைது செய்யப்பட்டார். செல்போனில் ரகசியமாக ஆபாச படம் பிடித்து அவர்களை மிரட்டி அவர் கற்பழித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    சண்டிகார்:

    அரியானா மாநிலம் பதேஹாபாத் நகரையொட்டிய தோகானா புற நகரைச் சேர்ந்தவர் அமர்புரி என்கிற பில்லு. 60 வயதான இவர் அங்குள்ள பிரபலமான பலக்நாத் கோவிலின் மடாதிபதியும் ஆவார். மந்திர, தந்திர கலைகளிலும் கைதேர்ந்த இவரிடம் ஏராளமான பெண்கள் குறி கேட்பதற்காக வருவதுண்டு.

    இப்படி தன்னைத் தேடி வரும் பெண்களை தனது வலையில் சிக்க வைத்து அவர்களை கற்பழிப்பதாக இவர் மீது அண்மையில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து மடாதிபதி அமர்புரியை பதேஹாபாத் பெண்கள் போலீஸ் நிலைய போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் அனுமதியும் பெற்றனர்.



    இதற்கிடையே, அமர்புரி மடாதிபதியாக உள்ள கோவிலிலும், அவருடைய வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சந்தேகத்துக்குரிய பல சி.டி.க்களை கைப்பற்றினர்.

    அப்போது, அவர் 120 பெண்களை தனது வலையில் விழ வைத்து கற்பழித்தது தெரிய வந்தது. அது மட்டுமின்றி மடாதிபதி அமர்புரி, தான் அந்த பெண்களுடன் உறவு கொள்வதை செல்போனில் ரகசிய வீடியோவாக படம் பிடித்து அதை வைத்து தொடர்ந்து அவர்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மடாதிபதியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உறவினர் மடாதிபதி எடுத்த அத்தனை ஆபாச புகைப்படங்களையும் சி.டி.யில் பதிவு அதை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.

    இதுபற்றி பதேஹாபாத் பெண்கள் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிம்லா தேவி கூறுகையில், “தற்போது மடாதிபதியால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் அவர் மீது புகார் அளிக்க முன்வந்திருப்பதுடன் இதுபற்றி வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் யார் யார் என சி.டி. மூலம் அடையாளம் காணப்பட்டு அந்த பெண்களிடமும் வாக்குமூலம் பெறப்படும்“ என்றார்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட மடாதிபதி அமர்புரி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அமர்புரி மீது சில மாதங்களுக்கு முன்பு, தனது கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணை கற்பழித்தாக பதேஹாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் அவர் ஜாமீனில் விடுதலை ஆகி வெளியே வந்து விட்டார்.

    அதன்பின்பு தனது பாதுகாப்பிற்காக போலீசாருக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் போலீசார் திட்டமிட்டு தன்னை மீண்டும் வழக்கில் சிக்க வைத்துவிட்டனர், என்று மடாதிபதி அமர்புரி குற்றம் சாட்டி உள்ளார். 
    Next Story
    ×