search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? - விடுதியில் நடந்த சோதனையால் பரபரப்பு
    X

    திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? - விடுதியில் நடந்த சோதனையால் பரபரப்பு

    தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கருதி திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதிகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி மற்றும் திருமலையில் ஏராளமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    இங்கு தங்க வரும் பக்தர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டும் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.

    திருப்பதியில் வருகிற 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை குறைந்த அளவிலான பக்தர்களையே தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 50 பேர் திருப்பதி வந்தனர். அவர்கள் உள்ளூர் போலீசாரின் துணையுடன் திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் 2 மற்றும் 3 விடுதிகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது விடுதியில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. அதே போல் வெளியே இருந்து உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை.

    விடுதியை சுற்றி உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் தேசிய பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையால் திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    சோதனை குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதுமில்லை. நள்ளிரவில் தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை நடத்தியதாக கூறினர்.
    Next Story
    ×