search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கியது
    X

    பாராளுமன்ற தேர்தல் - மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கியது

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 7 மாநில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. #Congress #BJP #Parliament election

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தனித்து நின்று போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதால் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி, முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் அஜீத்ஜோகியுடன் மாயாவதி புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். மாயாவதியின் இந்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இனியும் தாமதம் செய்தால் மாநிலங்களில் உள்ள செல்வாக்கு பெற்ற சிறு கட்சிகள் மெகா கூட்டணிக்குள் வராமல் போய் விடக்கூடும் என்ற பயம் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சை எந்தெந்த கட்சிகளுடன் எப்போது தொடங்குவது என்ற ஆலோசனையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

    காங்கிரஸ் நிர்வாகிகள் மாநிலம் வாரியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டு இந்த ஆய்வு நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், மராட்டியம், கர்நாடகா ஆகிய 7 மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.

    மாநில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசி ஒழுங்குப்படுத்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் 4 பேர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் குலாம்நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் எந்தெந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும், எவ்வளவு தொகுதிகளில் உடன்பாடு செய்து போட்டியிடும் என்பதை முடிவு செய்வார்கள். இவர்கள் மாநில கட்சிகளிடம் இருந்து கூடுதல் எம்.பி. இடங்களை கேட்டு பெற முடிவு செய்துள்ளனர்.

    பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒடிசாவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட்டில் ஆர்.ஜே.டி., ஜே.எம்.எம். ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்யாமல் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

    Next Story
    ×