search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது - தேவசம் போர்டு
    X

    சபரிமலை கோவிலில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது - தேவசம் போர்டு

    சபரிமலை கோவில் சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த இயலாது என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறி உள்ளார். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் அய்யப்பன் கோவில் உள்ளது.

    அய்யப்பன் நித்திய பிரம்மசாரி என்பதால் இவரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கினர்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்று திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 17-ந்தேதி ஐப்பசி மாத பிறப்பின் போது நடை திறக்கப்படும். மறுநாள் 18-ந்தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி வருகிற 18-ந்தேதி முதல் பெண் பக்தர்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஏற்பட்டுள்ளது.



    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் அவசர ஆலோசனை நடத்தினார். பெண்களை அனுமதிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சபரிமலையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு தொடங்கி உள்ளது என்று தீர்ப்பு வெளியான மறுநாள் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் நேற்று முதல் மந்திரி பினராயி விஜயன், தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனை கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தேவசம் போர்டுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தினார். இதற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்தார்.

    கூட்டம் முடிந்த பின்பு தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு என ஆச்சாரங்களும், அனுஷ்டானங்களும் உள்ளன. அதனை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தேவசம் போர்டு அதனை நிச்சயம் கடைபிடிக்கும்.

    கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்றால் சில அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். நிலக்கல், பம்பையில் இதற்கான ஏற்பாடுகளை எளிதில் செய்து விடலாம். ஆனால் சபரிமலை சன்னிதானத்தில் பெண்களுக்கென பிரத்தியேக ஏற்பாடுகளை செய்வது மிகவும் சிரமம்.

    சன்னிதானத்தில் இருந்து 18 படியேறி அய்யப்பனை தரிசிக்க செல்ல வேண்டும். இதற்காக சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். பெண்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கென தனி வரிசை அமைக்க வேண்டும். இப்போது அதற்கான சாத்தியம் சபரிமலையில் இல்லை. சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த இயலாது.

    அதே நேரம் பெண்களுக்கான கழிப்பறை, ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கலாம்.

    பெண்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க உடனடியாக 100 ஏக்கர் நிலம் தேவைப்படும். நிலக்கல் பகுதியில் இதனை வழங்க மாநில அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதியிலும் சுமார் 250 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

    இது பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது. அந்த நிலத்தை பெறுவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. அதனை பெற்று தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறினாலும், சபரிமலை கோவில் தந்திரி, பந்தளம் ராஜகுடும்பத்தினர் இதற்கு எதிராக உள்ளனர். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    இது தொடர்பாக அவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இன்றும், நாளையும் இந்த ஆலோசனை நடக்கும். அதன் பிறகு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஆலோசனை கூட்டம் 3-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு விவாதிக்கப்படும். அதன் பிறகு இப்பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தினால் சபரிமலை சுற்றுலா தலமாக மாறி விடும் என்று பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஆனால் எக்காரணம் கொண்டும் சபரிமலை சுற்றுலா தலமாக மாறாது, அது ஆன்மீக தலமாகவே இருக்கும் என்று முதல்-மந்திரி பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை அய்யப்பன் பற்றியும், அவரது ஆச்சாரங்கள் குறித்தும் கேரள பெண்களுக்கு நன்றாகவே தெரியும். சபரிமலை அய்யப்பனின் வரலாறு தெரிந்த பெண்கள் இக்கோவிலுக்கு வரமாட்டார்கள். எனது குடும்ப பெண்களும் அய்யப்பன் மீது அபரிதமான பக்தி கொண்டவர்கள். ஆனால் அவர்களும் சபரிமலை சன்னி தானம் வரமாட்டார்கள்.

    பெண் ஆர்வலர்கள், சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடியவர்கள் மட்டுமே சபரிமலை வருவார்கள் என்று கருதுகிறேன். இதனால் கோவில் நடை திறந்தாலும் பெரிய அளவில் பெண்கள் வருகை இருக்காது என்றே நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala

    Next Story
    ×