search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாராளுமன்ற தேர்தல் - கம்யூனிஸ்டு கட்சிகள் தனி அணி அமைக்க முடிவு
    X

    பாராளுமன்ற தேர்தல் - கம்யூனிஸ்டு கட்சிகள் தனி அணி அமைக்க முடிவு

    பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனி அணியாக செயல்பட தொடங்கி இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. #ParliamentElection #ElectionCommission #BJP

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28, ராஜஸ்தானில் டிசம்பர் 7-ந்தேதி, சத்தீஷ்கரில் நவம்பர் 12, 20-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு, இந்த மாநில சட்டசபை தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

    அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இடது சாரிகளை ஓரணியில் கொண்டு வர காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டனர். இதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் இரு மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிட மாயாவதி விரும்பினார். ஆனால் அவருக்கு அதிக இடங்களை கொடுக்க காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. இதனால் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து தங்களுடன் காங்கிரசார் கூட்டணி பற்றி பேசுவார்கள் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதையடுத்து காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.

     


    இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளது.

    சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும் போது மாயாவதி, அகிலேஷ் இருவரையும் சமரசம் செய்து கொள்ள ராகுல் தீர்மானித்துள்ளார். 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதன் மூலம் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளிடம் அதிக பேரம் பேசி கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

    அத்தகைய சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் மெகா கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே இடது சாரிகளுடன் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வைக்க இயலும் என்று கூறப்பட்டது.

    ஆனால் இடது சாரிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் மற்ற மாநில கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட போவதாக இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

    ராஜஸ்தானில் சமாஜ்வாடியுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தெலுங்கானாவில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் மார்க்சிஸ்டு கூட்டணி அமைத்துள்ளது.

    இது பற்றி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “பா.ஜ.க.வை தோற்கடிப்பதே லட்சியம். இதற்காகவே நாங்கள் கூட்டணியை மாற்றி உள்ளோம்“ என்றார்.

    இடது சாரிகளும் தனி அணியாக செயல்பட தொடங்கி இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. #ParliamentElection #ElectionCommission #BJP

    Next Story
    ×