search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க காங்கிரஸ் முடிவு
    X

    பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க காங்கிரஸ் முடிவு

    பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதியை நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. #Demonetisation #Congress

    புதுடெல்லி:

    பண மதிப்பு இழப்பு பற்றிய அறிவிப்பை 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். இதையடுத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ந்தேதியை நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பண மதிப்பு இழப்பு என்ற அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு முழுவதும் ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். சிறு தொழில்கள் முடங்கின. இந்த நிலையில் 5 மாநிலங்களுக்கு தேர்தல் வந்துள்ளது.

     


     

    டெல்லியில் நடைபெறும் கருப்பு தின நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்குவார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டு இந்த திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசுவார்கள்.

    பண மதிப்பு இழப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை புள்ளி விவரமாக காங்கிரஸ் தெரிவிக்கும். கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கப் போவதாக தவறான தகவலை கூறி இந்த திட்டத்தை கொண்டு வந்தனர்.

    இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தார்கள். எனவே நவம்பர் 8-ந்தேதியை காங்கிரஸ் நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த்சர்மா இதுபற்றி கூறியதாவது:-

    பொறுப்பற்ற முறையில் பிரதமர் எடுத்த இந்த முடிவால் கோடிக்கணக்கான மக்கள் வலியை அனுபவித்தனர். இந்தியா முழுவதும் ஏராளமானவர்கள் உயிரை இழந்தார்கள். பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. எனவே தான் இந்த கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Demonetisation #Congress

    Next Story
    ×