search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு - தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது
    X

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு - தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது

    மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்துள்ளது. #MekedatuDam #TNGovt #SupremeCourt
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.

    இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது.

    அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர்தேவை, மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும். அதற்கும் மத்திய அரசு ஒப்புதலை பெற்று விட்டால் மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.

    மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.


    இந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 30-ந்தேதி வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில் “கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும், திரும்ப பெற உத்தரவிடவேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு வக்கீல் உமாபதி முறையீடு செய்தார்.

    தமிழக அரசின் முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்தது.

    இதற்கிடையே மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதித்து தனித்தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. #MekedatuDam #TNGovt #SupremeCourt
    Next Story
    ×