search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2014 தேர்தல் வாக்குறுதி பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்?- காங்கிரஸ் கேள்வி
    X

    2014 தேர்தல் வாக்குறுதி பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்?- காங்கிரஸ் கேள்வி

    பாராளுமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றினாரா? என்பது பற்றி ஒரு கருத்துகூட கூறவில்லையே ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. #congress #parliamentelection #pmmodi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டி தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சூரஜ்வாலா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நரேந்திரமோடி ஒரு தோல்வி அடைந்த பிரதமர். தனது பேட்டியில் முழுமையாக தன்னை முன்னிலைப்படுத்தியே தகவல்களை கூறியிருக்கிறார். எல்லாவற்றிலும் நான், எனது, என்னுடையது என்ற வார்த்தைகளையே பயன்படுத்தி அத்தனையையும் பொய்யான தகவலாக வெளியிட்டுள்ளார்.

    2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றினாரா? என்பது பற்றி ஒரு கருத்துகூட கூறவில்லை. அந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது.

    ஜி.எஸ்.டி. வரி, பண மதிப்பிழப்பு வங்கி முறைகேடு, கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னதில் ஏற்பட்ட தோல்வி, நாட்டின் பாதுகாப்பு மோசமான நிலை, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு போன்றவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


    இன்றைய நிலையில் பிரதமர் மோடி தனக்கு உதவி இல்லாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நபராக இருக்கிறார். அடுத்து அவர் எங்கு தேர்தலில் நிற்கப்போகிறார் என்பதற்கே பதில்சொல்ல முடியவில்லை.

    இவ்வாறு சூரஜ்வாலா கூறியுள்ளார்.

    காங்கிரஸ் மேல்சபை துணைத்தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    முன்கூட்டியே ஏற்பாடு செய்த பேட்டி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்திருக்கிறார். அவரால் பாராளுமன்றத்திலோ, பத்திரிகையாளர் கூட்டத்திலோ பதில் சொல்ல முடியவில்லை. எனவே அந்த நிகழ்வுகளை தவிர்த்துவிட்டு தனிப்பட்ட பேட்டிக்கு ஏற்பாடு செய்து அதில் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.

    அவர் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதை மக்கள் மறந்துவிடவில்லை. இந்த நிலையில் புத்தாண்டில் புதிய பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். அவர் சொன்ன அத்தனையும் பொய்.

    2019 பாராளுமன்ற தேர்தலுக்காக கதை விடுகிறார். இதுபோன்ற பேட்டி மூலம் மக்களை ஏமாற்றிவிட முடியாது. உண்மையிலேயே தைரியம் இருந்தால் பாராளுமன்றத்திலும், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் விவாதிக்கட்டும்.

    மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கிவிட்டு இப்போது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கடவுள் ராமரை அழைக்கிறார். அவர் பொய் சொல்வதை ராமர் கேட்கமாட்டார் என்று அவர் நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #parliamentelection #pmmodi

    Next Story
    ×