search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது
    X

    வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது

    தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புனே:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.



    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39).  இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

    இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

    அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார்.  இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.

    ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. #JammuKashmir #CRPF #RailwayEmployee
    Next Story
    ×