search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் கூட்டணி: காங்கிரசுடன் இனி பேசமாட்டோம் - கெஜ்ரிவால்
    X

    டெல்லியில் கூட்டணி: காங்கிரசுடன் இனி பேசமாட்டோம் - கெஜ்ரிவால்

    டெல்லியில் கூட்டணி குறித்து காங்கிரசுடன் இனி பேசமாட்டோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AamAadmi #Kejriwal

    புதுடெல்லி:

    பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும் ஒரு சில மாநிலங்களில் இந்த முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

    டெல்லி மாநிலத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலுமே கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.

    இந்த தடவை காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் தொகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. இந்த இரு கட்சிகளுமே பாரதிய ஜனதாவுக்கு எதிரானவையாகும்.

    எனவே இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்தன. 7 தொகுதிகளை சம அளவில் பிரித்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. காங்கிரசுக்கு 2 தொகுதிகள் மட்டும் விட்டு கொடுத்து 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட விரும்பியது.

    ஆனால் சம அளவு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. 7 தொகுதிகளை சமமாக பிரிக்க முடியாது என்பதால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புதிய சமரச திட்டம் ஒன்றை உருவாக்கினார்.

     


    இதன்படி ஆம் ஆத்மி, காங்கிரஸ் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது, ஒரு தொகுதியை பொதுவான நபர் ஒருவருக்கு விட்டுக்கொடுத்து இரு கட்சிகளும் ஆதரவளிப்பது என்பது திட்டமாகும்.

    இதற்கும் ஆம் ஆத்மி கட்சி உடன்படவில்லை. இது சம்பந்தமாக இரு கட்சி தலைவர்களும் நீண்ட நாட்களாக பேசி வந்தனர். ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    இந்த நிலையில் சரத்பவார் நேற்று டெல்லி வந்தார். அவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் ஆம் ஆத்மி கட்சி மேல் சபை தலைவர் சஞ்சய் சிங்கை சந்தித்தார். இரு தரப்பினரிடமும் கூட்டணிக்கு சம்மதிக்கும்படி வற்புறுத்தினார். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி அமைப்பாளர் கோபால் ராய், “நாங்கள் தனித்து போட்டியிடப்போகிறோம். காங்கிரசுடன் கூட்டணி இல்லை” என்று கூறினார்.

    இதை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆமோதித்துள்ளார். நேற்றுடெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இது பற்றி கூறும்போது, “இனி காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி குறித்து பேச மாட்டோம். காங்கிரசை பொறுத்தவரை தனது கூட்டணியை பலவீனமாக்கி வருகிறது. அவர்களுடன் பேசுவதால் இனி எந்த பலனும் இருக்காது” என்று கூறினார்.

    டெல்லி காங்கிரஸ்மேலிட பார்வையாளர் பி.சி. சாக்கோ கூறும் போது, “பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. டெல்லி முக்கிய தலைவரான ஷீலா தீட்சித்தை நான் சந்தித்து பேசியபோது அவர் ஆம் ஆத்மியிடம் கூட்டணி வேண்டாம் என்று பிடிவாதமாக கூறுகிறார். இனி இதுபற்றி ராகுல் காந்திதான் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார். #AamAadmi #Kejriwal

    Next Story
    ×