search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டியிட ஆள் இல்லாததால் காங்கிரசிடம் 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் தேவேகவுடா
    X

    போட்டியிட ஆள் இல்லாததால் காங்கிரசிடம் 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் தேவேகவுடா

    கர்நாடக மாநிலத்தில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் கிடைக்காத நிலையில் காங்கிரசிடம் இருந்து 3 வேட்பாளர்களை கடனாக வாங்க உள்ளனர். #LSPolls
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலிலும் இக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    அதில் உடுப்பி- சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய 3 தொகுதிகளும் மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசே‌ஷம் என்னவென்றால் இந்த தொகுதிகளில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை.

    எனவே அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இருந்தும் தகுதியான வேட்பாளர் கிடைக்கவில்லை.

    எனவே 3 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளர்களை கடன் வாங்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் பிரமோத் மத்வராஜும், பெங்களூரு வடக்கு தொகுதியில் பி.எல். சங்கரும், உத்தரகன்னடா தொகுதியில் பிரசாந்த் தேஷ்பாண்டே அல்லது நிவேதித் ஆல்வா போட்டியிட உள்ளனர்.

    அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணு கோபால் மற்றும் கர்நாடக மாநில தலைவர் தினேஷ், குண்டுராவ் ஆகியோருடன் தொடர்ந்து பேசிவருகிறார்.



    இதற்கு காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது. எனவே அந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

    எச்.டி.தேவேகவுடாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமோத் ஏற்கனவே ‘பி’ படிவம் பெற்று விட்டார். அவர் இன்னும் ஒரிரு நாளில் வேட்பு மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.

    மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தான் போட்டியிடுவதை சங்கர் உறுதி செய்துள்ளார். எச்.டி. தேவேகவுடா தும்கூரு தொகுதியில் போட்டியிட்டால் நான் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

    உத்தரகன்னடா தொகுதியில் போட்டியிட வருவாய் துறை மந்திரி ஆர்.வி. தேஷ்பாண்டே மகன் பிரசாந்த் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்கு மந்திரி தேஷ்பாண்டே முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதுகுறித்து என்னிடமோ, மகனிடமோ மத சார்பற்ற ஜனதா தளம் பேசவில்லை என மறுத்துள்ளார்.

    மாற்று கட்சியிடம் இருந்து வேட்பாளரை கடன் வாங்கிய வரலாறு இந்தியாவில் எங்கும் நடைபெற்றதில்லை. தற்போது முதன் முறையாக மத சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளரை கடனாக பெறும் தேர்தல் கூத்து கர்நாடகத்தில் தொடங்கியுள்ளது. #LSPolls
    Next Story
    ×