search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தும்கூருவில் தேவேகவுடாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி. வாபஸ்
    X

    தும்கூருவில் தேவேகவுடாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி. வாபஸ்

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை எதிர்த்து கர்நாடக மாநிலம், தும்கூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டி மனு தாக்கல் செய்த காங்கிரஸ் எம்.பி. இன்று வாபஸ் பெற்றுள்ளார். #DeveGowda #TumkurLSpolls
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. 

    இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 25-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இதே தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பதவி வகிக்கும் முட்டாஹனுமேகவுடாவும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவர்கள் இருவரில் யார் வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்? என்பது புரியாத நிலை நீடித்து வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையின் அறிவுரைப்படி தும்கூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவை முட்டாஹனுமேகவுடா இன்று திரும்பப் பெற்றார். 

    இதேபோல், தும்கூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தேவேகவுடாவின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.என். ராஜன்னா என்பவரும் கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

    பாஜக சார்பில் தும்கூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பசவராஜ் போட்டியிடுகிறார். #DeveGowda #TumkurLSpolls
    Next Story
    ×