search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கொரோனா நோயாளிகள் பட்டியலில் பெங்களூருவுக்கு 2-வது இடம்

    பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்த நிலையில், சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தை பிடித்து உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 504 இருந்தது. உயிரிழப்பு எண்ணிக்கை 2,147 ஆக உள்ளது.

    கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்த அளவே இருந்தது. அதிலும் தலைநகர் பெங்களூருவில் தினமும் 100, 200, 300 என்ற அளவில் தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட பின்னரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களாலும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தொட்டு வருகிறது. இது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெங்களூருவில் இந்த மாதத்தில் நேற்று முன்தினம் வரை 46 ஆயிரத்து 536 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    கொரோனா பாதிப்பில் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் தான் முதலில் ஆயிரத்தை தாண்டியது. அதன்பின்னர் பெங்களூருவில் வேகம் எடுத்த கொரோனா, உடுப்பியை பின்னுக்கு தள்ளிவிட்டு தற்போது முதலிடத்தை பிடித்து விட்டது. நேற்று முன்தினம் வரை பெங்களூருவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 91 ஆக இருந்தது.

    இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சையில் உள்ள நகரங்களில் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தை பிடித்து உள்ளது. மராட்டிய மாநிலம் புனே நகரம் முதலிடத்தில் உள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 13 ஆயிரத்து 879 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 36 ஆயிரத்து 224 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×