search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5-வது நாளாக மீட்பு பணி: மண்ணில் புதைந்த 250 பேர் கதி என்ன?
    X

    5-வது நாளாக மீட்பு பணி: மண்ணில் புதைந்த 250 பேர் கதி என்ன?

    • மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    • ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இந்த சம்பவத்தில் அந்த இடங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். மேலும் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி, ராணுவ வீரர்களும் களமிறக்கப்பட்டனர். ராணுவத்தில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடும் சிரமத்துக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தோண்டத் தோண்ட மனித உடல்கள் சிக்கியபடியே இருந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்த படி இருந்தது.

    மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு 4-வது நாளான நேற்று இரவு வரை 336 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பெரும்பாலான உடல்கள் சின்னா பின்னமான நிலையிலும், உருக்குலைந்த நிலையிலுமே மீட்கப்பட்டன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோய் இருந்தது.


    நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த வீடுகள் இருந்த பகுதிக்கு செல்லவும், அந்த பகுதியை தோண்டி பார்க்க ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் ராணுவ வீரர்கள் விரைந்து கட்டிய தற்காலிக பாலங்கள் உதவின. இதன்மூலம் ஜே.சி.பி. வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு அனைத்து இடங்களையும் தோண்டி பார்க்கப்பட்டது.

    மேலும் மண்ணுக்குள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா? என்பதை கண்டறிய நவீன கருவிகளை ராணுவவீரர்கள் பயன்படுத்தினர். இந்த பணி நேற்று இரவு வரை நடந்த நிலையில் யாரும் உயிரோடு இருப்பதாக சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த முயற்சி நேற்று இரவு கைவிடப்பட்டது.

    மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி தன்னார்வ குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. அவர்களது மீட்பு மற்றும் தேடுதல் பணி இன்று 5-வது நாளாக நீடித்தது. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்ட வைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது.

    இன்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் இன்று காலை பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது.

    நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும்பணி இன்று 5-வது நாளாக தொடர்ந்தது.


    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

    மாயமான 250-க்கும் மேற்பட்டவர்களில் பலர் 3 கிராமங்களில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆளில்லாத விமானம் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்படங்களை 640 குழுக்களிடமும் கொடுத்துள்ளனர். இந்த 640 குழுவினரும் 6 மண்டலங்களாக பிரிந்து மாயமான சுமார் 250 பேரையும் தேடி வருகிறார்கள். மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை இயக்கி ஜி.பி.எஸ். சிக்னல் வாயிலான அவர்களது கடைசி இருப்பிடத்தை கண்டறிய முயற்சிகள் நடக்கிறது.

    இதில் வெற்றி கிடைத்தால் மாயமான 250 பேரில் கணிசமானவர்களின் நிலை தெரிய வரும். ஒருவேளை அவர்கள் ஆழமான பகுதியில் மணலில் புதைந்து கிடந்தாலும் அதை உறுதிப்படுத்த முடியும்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களில் கணிசமானவர்கள் சாலியாறு பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ராணுவம் மற்றும் காவல் துறை ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறந்து சென்று தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாலியாற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்து சென்றுள்ளன. எனவே உடல்களை மீட்பதில் தொடர்ந்து கடும் சிக்கல் நிலவுகிறது.

    Next Story
    ×