search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
    X

    அரவிந்த் கெஜ்ரிவால்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

    • அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
    • நாளை ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    சென்னை:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இதுவரை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் அவரது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்துள்ளார். இதேபோல், ஜெ்ரிவால் தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோரை சந்தித்தார். அப்போது, அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.

    இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மத்திய அரசின் அரசியல் சாசனத்துக்கு விரோதமான ஜனநாயக விரோத டெல்லி அவரச சட்டத்துக்கு எதிராக தி.மு.க.வின் ஆதரவைக் கோருவதற்காக ஜூன் 1-ம் தேதி சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினனைச் சந்திக்க உள்ளேன். ஜூன் 2-ம் தேதி ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×