search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதான முஜாமில் ஷெரீப்புடன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு?
    X

    பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதான முஜாமில் ஷெரீப்புடன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு?

    • பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய முசபீர் மற்றும் அப்துல் மதீன் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
    • பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்தி இருந்த முசபீருக்கு 2 சிம் கார்டுகளையும் முஜாமில் ஷெரீப் வாங்கி கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி 2 குண்டுகள் வெடித்தது. இதுகுறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் குண்டுவெடிப்பில் ஈடுபட்டது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா தான் என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    அவர்கள் பற்றிய பல்வேறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பில் குற்றவாளிகளுக்கு உதவியதாக சிக்கமகளூருவை சேர்ந்த முஜாமில் ஷெரீப்பை கைது செய்துள்ளனர்.

    அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு 7 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது அதிகாரிகளுக்கு பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. முதலில் பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிப்பொருட்களை முஜாமில் ஷெரீப் சப்ளை செய்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், பெங்களூரு தவிர்த்து மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு, சிவமொக்காவில் நடந்த குண்டுவெடிப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு தேவையான வெடிப்பொருட்களை முஜாமில் ஷெரீப் தான் சப்ளை செய்திருந்ததை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    அதாவது பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய முசபீர் மற்றும் அப்துல் மதீன் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அப்துல் மதீன் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வருவதுடன், அந்த அமைப்புக்கு தென்னிந்தியாவில் உள்ள இளைஞர்களை சேர்த்து விடும் வேலைகளையும் செய்து வந்துள்ளார். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு சிக்கமகளூருவை சேர்ந்த முஜாமில் ஷெரீப்புடன் அப்துல் மதீனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அவரை மூளை சலவை செய்து, பயங்கரவாத அமைப்புக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதித்துள்ளார். செல்போன் செயலி மூலமாக 2 பேரும் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்பிறகு, 2022-ம் ஆண்டு முஜாமில் ஷெரீப்பை தொடர்புகொண்டு 2 சம்பவங்களுக்கு (சிவமொக்கா, மங்களூரு) வெடிப்பொருட்கள் வேண்டும் என்று அப்துல் மதீன் கூறியுள்ளார்.

    அதன்படி, அவரும் வெடிப்பொருட்களை சப்ளை செய்திருக்கிறார். அதன்பிறகு, 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி சிவமொக்காவில் குண்டுவெடிப்பு பயிற்சி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் 19-ந் தேதி மங்களூரு கத்ரி கோவிலை தகர்க்க குக்கர் குண்டை ஆட்டோவில் கொண்டு சென்றபோது வெடித்தது தெரியவந்தது.

    இதற்கிடையில், பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்தி இருந்த முசபீருக்கு 2 சிம் கார்டுகளையும் முஜாமில் ஷெரீப் வாங்கி கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அந்த 2 சிம் கார்டுகளை வாங்குவதற்காக, முசபீர் உசேன் சாஜீப் பெயரை மாற்றி போலி ஆதார் அடையாள அட்டையை தயாரித்து, அதன்மூலம் சிம்கார்டு வாங்கி இருப்பதும் என்.ஐ.ஏ. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் கைதான முஜாமில் ஷெரீப்புடன் மங்களூருவை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, முஜாமில் ஷெரீப்புக்கு சிக்கமகளூரு அய்யப்பா நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் கூறியதன் பேரில் வீட்டின் உரிமையாளர் முஜாமில் ஷெரீப்புக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். 6 மாதங்கள் அங்கு தாயுடன் தங்கி இருந்த முஜாமில் ஷெரீப், பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு 20 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூருவுக்கு வந்திருந்தார். முஜாமில் ஷெரீப் கைது செய்யப்பட்டவுடன், அவரது தாய் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிக்கமகளூருவுக்கு சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் முஜாமில் ஷெரீப்புக்கு வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்த இன்ஸ்பெக்டர் யார்? அவருக்கும் முஜாமில் ஷெரீப்புக்கும் என்ன தொடர்பு?, பயங்கரவாதிகளுடன் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகிறார்கள்.

    மற்றொரு புறம் தலைமறைவாக இருக்கும் முசபீர் மற்றும் அப்துல் மதீனை கைது செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×