search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் பரிசு
    X

    அப்துல் மதீன்- முசபீர் உசேன் சாஜீப்

    பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் பரிசு

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு நகரங்களில் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளிகள் 2 பேரும் பல்வேறு தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேஸ்வரம் கபே ஓட்டலில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் என்பவர் தான் குண்டு வைத்ததாக கருதப்படுகிறது. இவர், அப்துல் மதீன் அகமது தாகா என்பவருடன் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்பு 2 மாதங்கள் சென்னையில் தங்கி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு நகரங்களில் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு உதவியதாக கூறி நேற்று முன்தினம் முஜாமில் ஷெரீப் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    முஜாமில் ஷெரீப் கடந்த 16 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார். பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த அவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார்.

    முஜாமில் ஷெரீப், ஓட்டலில் வேலை செய்தபடி குண்டுவெடிப்புக்கு தேவையான பொருட்களை கூரியர் மூலம் சப்ளை செய்து உதவி வந்தது விசாரணையில் தெரிந்தது.

    இந்த நிலையில் பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளான முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேரின் புகைப்படங்களையும் என்.ஐ.ஏ. நேற்று வெளியிட்டுள்ளது. அதாவது, முக்கிய குற்றவாளிகள் 2 பேரும் பல்வேறு தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    அத்துடன், அவர்கள் 2 பேரும் தங்களை பற்றிய விவரங்களை மறைத்து போலியான பெயர்களுடன் சாதாரண மக்கள் போன்று வசித்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களை பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் 2 பேரையும் தேடும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான முஜாமில் ஷெரீப் அளிக்கும் தகவல் அடிப்படையில் 2 பேரையும் பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×