search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருச்சூர் லாட்ஜில் அறை எடுத்து மகளுடன் தற்கொலை செய்த சென்னை தம்பதி- கடிதம் சிக்கியது
    X

    திருச்சூர் லாட்ஜில் அறை எடுத்து மகளுடன் தற்கொலை செய்த சென்னை தம்பதி- கடிதம் சிக்கியது

    • சந்தோஷ் பீட்டர் தொழில்நிமித்தம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்தார்.
    • சென்னையில் உள்ள போலீசாரையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை அடுத்த திருப்புணித்துறையை சேர்ந்தவர் சந்தோஷ் பீட்டர் (வயது51). இவரது மனைவி சுமி (50). மகள் ஐரின் (20).

    சந்தோஷ் பீட்டர் தொழில்நிமித்தம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்தார். அங்கு மடிப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வீடு எடுத்து வசித்து வந்தார். சென்னையில் பல ஆண்டுகள் தங்கி இருந்ததால், அங்கு பலருடனும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அவரும், அவரது மனைவி மற்றும் மகளும் கடந்த வாரம் கேரளா சென்றனர். அங்கு திருச்சூர் பகுதிக்கு சென்ற சந்தோஷ் பீட்டர், பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    அப்போது லாட்ஜ் மானேஜரிடம் 8-ந் தேதி காலையில் அறையை காலி செய்து விடுவோம் என்று கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை அவர்கள் அறையை காலி செய்யவில்லை. மேலும் நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து பார்த்தபோது அங்கு சந்தோஷ் பீட்டர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். கட்டிலில் அவரது மனைவி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.

    அவரது மகள் ஐரின், குளியலறையில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். 3 பேரும் தற்கொலை செய்திருப்பதை பார்த்த போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அறையை சோதனை செய்தபோது அங்கு சந்தோஷ் பீட்டர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

    அதில், எங்களுக்கு சொந்த ஊர் கேரளா என்றாலும் பல ஆண்டுகளாக சென்னையில்தான் வசித்து வந்தோம். இதில் அங்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்தது. எங்களிடம் பணம் வாங்கிய சிலர் எங்களை ஏமாற்றி விட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானோம். அதில் இருந்து எங்களால் மீள முடியவில்லை.

    இதன் காரணமாகவே நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், சந்தோஷ் பீட்டர் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டிய மர்ம கும்பல் யார்? என்பது பற்றி விசாரணை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதற்காக சென்னையில் உள்ள போலீசாரையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பிறகே சந்தோஷ் பீட்டர் குடும்பத்தினரை ஏமாற்றிய சென்னை கும்பல் யார்? என்பது பற்றிய விபரம் தெரியவரும்.

    Next Story
    ×