search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் கடலோர பகுதியை தாக்கியது பிபோர்ஜோய் புயல்.. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
    X

    குஜராத் கடலோர பகுதியை தாக்கியது பிபோர்ஜோய் புயல்.. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

    • சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    • புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.

    இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    புயல் காரணமாக நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

    தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், ஏற்கனவே கணித்தபடி பிபோர்ஜேய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள துவாரகா, ஓகா, நலியா, பூஜ், போர்பந்தர் மற்றும் காண்ட்லா ஆகிய பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

    புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. கூரை வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஐந்து நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×