search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் கோவில் மாடுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு
    X

    தெலுங்கானாவில் கோவில் மாடுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு

    • மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை
    • இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா மாவட்டம், வெமுலவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசு மற்றும் எருதுக்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    தானமாக பெறும் மாடுகளை வளர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோசாலை அமைக்கப்பட்டது. முதலில் 300 மாடுகளை பராமரிக்கும் அளவு கொட்டகை அமைத்தனர்.

    பக்தர்கள் கோவிலுக்கு தானமாக வழங்கும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் தற்போது 2500-க்கும் மேற்பட்ட பசு மற்றும் மாடுகள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை.

    தற்போது உள்ள கோசாலையில் 450 முதல் 500 மாடுகள் வரை மட்டுமே பராமரிக்க வசதிகள் உள்ளது.

    எனவே மீதமுள்ள மாடுகளை, ஏழை விவசாயிகள் மற்றும் இந்து அமைப்புகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் வழங்கி வருகின்றனர். இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இதற்காக கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கோவில் செயல் அலுவலர், உதவி கோட்ட அலுவலர், வேளாண்மை அலுவலர், நகராட்சி ஆணையர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    அவர்களின் பரிந்துரையின் பேரில் மாடுகளை இலவசமாக வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×