என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டொமினிக் மார்ட்டினுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணி தீவிரம்
- டொமினிக் மார்ட்டினை அவரது வீடு, வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்துச்சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
- டொமினிக் மார்ட்டினின் செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்தேதி குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45), இடுக்கி மாவட்டம் தொடு புழா பகுதியை சேர்ந்த குமாரி(53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் குண்டுவெடிப்பு நடந்த சிறிது நேரத்திலேயே, குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஊழியர் என்பதும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து வெளியே வந்து விட்டதும், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து டொமினிக் மார்ட்டினை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடி மருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த சதித் திட்டத்தை நிறைவேற்றியது தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் தான் மட்டுமே சதித்திட்டதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தனது செல்போனில் இருந்த குண்டுவெடிப்பை நிகழ்த்திய வீடியோ ஆதாரங்களையும் அவர் காண்பித்தார்.
மேலும் டொமினிக் மார்ட்டினை அவரது வீடு, வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்துச்சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்களுக்கு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான பல்வேறு தடயங்கள் கிடைத்தன.
விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டுவெடிப்பு சதியில், தான் ஒருவர் மட்டும் தான் ஈடுபட்டதாக டொமினிக் மார்ட்டின் கூறியிருந்தாலும், வேறு சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் அது தொடர்பான தங்களது விசாரணையில் தொடர்ந்து வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தபிறகு டொமினிக் மார்ட்டினுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் இருந்து நீக்கப்பட்டவர்கள், சபையில் இருந்து வெளியேறியவர்கள், அதிருப்தியாளர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை சேகரிக்கின்றனர்.
அவர்களில் டொமினிக் மார்ட்டினுடன் தொடர்பில் யாரேனும் இருந்தார்களா? என்று கண்டறியும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டொமினிக் மார்ட்டினுடன் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள், சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.
இதற்காக டொமினிக் மார்ட்டினின் செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். அதில் அவருடன் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுடன் பேசிய விவரங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்