search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Modi vs Kharge
    X

    தேர்தல் வாக்குறுதி சண்டை: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

    • BJP என்ற வார்த்தையில் B என்றால் துரோகம் (Betrayal) J என்றால் ஜூம்லா (Jhumla) என்று அர்த்தம்.
    • பாஜக அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

    கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தது. சக்தி திட்டம் எனும் இத்திட்டத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.

    இந்நிலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், "பஸ் டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்' என சில மாணவிகள் இ - மெயில் மற்றும் 'எக்ஸ்' வலைத்தளம் வழியாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து காங்கிரஸ் மாநில பிரிவுகள், சரியான பட்ஜெட்டையும், நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்காத தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

    கார்கேவின் இக்கருத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். அதை அவர்கள் ஒருபோதும் வழங்கமுடியாது. இப்போது மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்.

    இன்று காங்கிரசுக்கு எந்த மாநில அரசுகள் உள்ளன? இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வளர்ச்சிப் பாதை மற்றும் நிதி ஆரோக்கியம் மோசமாக இருந்து வருகிறது. அவர்களின் உத்தரவாதங்கள் என அழைக்கப்படுபவை நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. இது இந்த மாநிலங்களின் மக்களுக்கு இழைக்கப்படும் பயங்கரமான வஞ்சகமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் மோடியின் இந்த கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பதிவில், "பொய், வஞ்சகம், போலித்தனம், கொள்ளை மற்றும் விளம்பரம் ஆகியவை பாஜக அரசாங்கத்தை சிறப்பாக விவரிக்கும் 5 சொற்கள் ஆகும். 100 நாள் திட்டத்தைப் பற்றி நீங்கள் கூறியது ஒரு மலிவான PR ஸ்டண்ட்.

    மே 16, 2024 அன்று, 2047 ஆம் ஆண்டு வரைக்குமான 'ரோடு மேப்பிற்காக' 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துக்கள் பெற்றதாக நீங்கள் கூறினீர்கள். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் உங்கள் பொய்கள் அம்பலமாகிவிடும் என்பதால் விவரங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

    BJP என்ற வார்த்தையில் B என்றால் துரோகம் (Betrayal) J என்றால் ஜூம்லா (Jhumla) என்று அர்த்தம். இந்தியாவின் வாலைவாய்ப்பின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

    7 ஆண்டுகளில் 70 வினாத்தாள்கள் கசிந்ததற்கு யார் காரணம். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று 5 லட்சம் அரசு வேலைகளை பறித்தவர்கள் யார்?

    இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. பாஜக அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது, அவ்வகையில் ஒவ்வொரு இந்தியர் மீதும் ரூ.1.5 லட்சம் கடன் உள்ளது. ஜிஎஸ்டி வெறியினால் சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன

    SC, ST, OBC மற்றும் EWS சமூகத்தினரிடமிருந்து அரசு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது. சாதாரண/ஒப்பந்த வேலைகள் 91% அதிகரித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மேற்கோள் காட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

    Next Story
    ×