search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூண்டு - காய்கறியா? மசாலா பொருளா? - நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?
    X

    'பூண்டு' - காய்கறியா? மசாலா பொருளா? - நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

    • விவசாயிகள் அமைப்பு பூண்டை காய்கறியாக வகைப்படுத்த மண்டி வாரியத்தை வற்புறுத்தியது.
    • வணிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது. சுவாச கோளாறுகளை சரி செய்ய பூண்டிலுள்ள சல்பைடு எண்ணெய் மிகவும் உதவியாக உள்ளது.

    வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும். நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது. கபத்தை இளக்கி தூக்கத்தை தரக்கூடிய பூண்டானது செரிமானத்தை சீர்படுத்தக்கூடியது; உடல் எடை கூட்டக்கூடியது.

    சமையலில் முக்கியத்துவம் கொடுத்து பூண்டு ரசம், குழம்பு, துவையல் என பல்வேறு வடிவங்களில் சாப்பிடுவதன்மூலம் வாயுதொடர்பான நோய்கள் குணமாகும். இதயக்கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பவர்களும் வெள்ளைப்பூண்டை வேக வைத்து சாப்பிடுவதால் நாளடைவில் அவர்களுக்கு நோய்கள் கட்டுக்குள் வரும்.

    சபாஷ் சரியான கேள்விதான். இதைவைத்து ஒரு பட்டிமன்றமே நடத்திவிடலாம். எனினும் இது சற்று சிந்திக்கக்கூடிய விசயம்தான். இந்த விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

    2015-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் அமைப்பு பூண்டை காய்கறியாக வகைப்படுத்த மண்டி வாரியத்தை வற்புறுத்தியது. ஆனால் வேளாண்மைத் துறை வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டம் 1972 -ன் கீழ் பூண்டை ஒரு மசாலாப் பொருளாக மறுவகைப்படுத்தியது.

    இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு கமிஷன் முகவர்கள் சங்கம் 2016-ம் ஆண்டில் வேளாண்துறையின் முடிவை எதிர்த்து மத்தியப் பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் பெஞ்ச்சை அணுகியது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனி நீதிபதி சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார், இந்த முடிவு முக்கியமாக விவசாயிகளை விட கமிஷன் ஏஜெண்டுகளுக்கு நன்மை பயக்கும் என்று வாதிட்ட வணிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜூலை 2017-ல், மனுதாரர்களில் ஒருவரான முகேஷ் சோமானி ஒரு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி டி.வெங்கடராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

    அதன்படி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் 2015 -ம் ஆண்டின் தீர்ப்பை உறுதி செய்து பூண்டு ஒரு காய்கறியாக அறிவித்துள்ளது. அதாவது தற்போது மீண்டும் காய்கறி பட்டியலில் பூண்டு வந்துள்ளது.

    இந்தூர் பெஞ்ச் இறுதியாக இந்த பல ஆண்டுகளாக நீடித்த விவாதத்தை முடித்து, பூண்டை ஒரு காய்கறியாக அறிவித்து, காய்கறி மற்றும் மசாலா சந்தைகளில் விற்க அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே வேளாண் துறை இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்கிறதா அல்லது இதை ஒரு காய்கறியாகக் கருதி இந்த விஷயத்தை கிடப்பில் போடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.

    Next Story
    ×