search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமியை கொன்ற சிறுத்தை எது என மரபணு சோதனை: பிடிபட்ட சிறுத்தைகள் மீண்டும் வன பகுதியில் விட முடிவு
    X

    சிறுமியை கொன்ற சிறுத்தை எது என மரபணு சோதனை: பிடிபட்ட சிறுத்தைகள் மீண்டும் வன பகுதியில் விட முடிவு

    • நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நடைபாதையில் செல்வதை தவிர்த்தனர். இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது.

    கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை கண்டுபிடிக்க அவைகளின் நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரபணு பரிசோதனை வர தாமதம் ஆகி வருகிறது.

    மரபணு பரிசோதனை அறிக்கையில் கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் சிறுத்தைகளை வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று முன்தினம் அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. கம்புகள் வந்த பிறகு பக்தர்களுக்கு அலிபிரி நடைபாதையில் கம்புகள் வழங்கப்படும்.

    முழங்கால் மெட்டு என்ற பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்பு மீண்டும் பெறப்பட்டு அலிபிரி நடைபாதைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 81,655 பேர் தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3. 84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×