search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு பேரழிவுக்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியான தகவலை கொடுத்ததா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வயநாடு பேரழிவுக்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியான தகவலை கொடுத்ததா?

    • நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது.
    • மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் அதிகனமழை, நிலச்சரிவு பற்றிய துல்லிய வானிலை எச்சரிக்கையை அளித்திருந்தால், மக்களை அங்கிருந்து இடமாற்றம் செய்திருக்கலாமே என்ற குரல்கள் கேட்கின்றன.

    இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 'கேரள அரசுக்கு கடந்த 23-ம் தேதி, முதல் வானிலை எச்சரிக்கை, மத்திய அரசால் அளிக்கப்பட்டது. அதே எச்சரிக்கை அடுத்தடுத்து 3 நாட்களுக்கு அளிக்கப்பட்டன. அங்கு 20 சென்டி மீட்டர்க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று கேரளா அரசுக்கு 26-ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, நிலச்சரிவும் ஏற்படலாம், அதனால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது' என்று தெரிவித்தார்.

    மத்திய மந்திரி அமித்ஷா கூறியதை மறுத்த கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், 'இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி.), இந்திய புவியியல் ஆய்வகம் (ஜி.எஸ்.ஐ.) மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகிய 3 முகமைகளுமே, வயநாட்டில் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவிற்கு முன்பு, ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கையை (மிகஅதிக அளவிலான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை) அளிக்கவில்லை.

    நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது. மேலும், 30 மற்றும் 31-ம் தேதிகளுக்கு ஜி.எஸ்.ஐ. கொடுத்தது பச்சை நிற எச்சரிக்கையைத்தான் (மிகக்குறைவான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை). அதில், சிறிய அளவில் நிலச்சரிவோ அல்லது பாறை வெடிப்போ ஏற்படலாம் என்றுதான் கூறப்பட்டு இருந்தது. மத்திய மந்திரி அமித்ஷா கூறும் கருத்து, உண்மைக்கு முரணாக உள்ளது'' என்று கூறினார்.

    உண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த செய்திக் குறிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் உள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    அதன்படி இந்திய வானியை ஆய்வு மைய ஜூலை 18-ம் தேதி செய்திக்குறிப்பில், 19-ம் தேதி கேரளாவின் வடபகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 23-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் 25-ம் தேதி சில இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்; சில இடங்களில் 27-ம் தேதிவரை கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், ஜூலை 25-ம் தேதிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் (அதிக மழைக்கான எச்சரிக்கை), 23, 24, 26, 27-ம் தேதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் (சற்று கூடுதல் மழை பாதிப்பு எச்சரிக்கை) அளிக்கப்பட்டது. மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    ஜூலை 25-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் இடி, மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை அடுத்த 5 நாட்களுக்கு பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. ஜூலை 29-ம் தேதி செய்திக்குறிப்பில், அதிக மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் 30-ம் தேதியன்று அதிகாலையில் நிலச்சரிவு பேரிடர் நேரிட்டது. அதன் பிறகுதான் 30-ம் தேதி பிற்பகல் 1.10 மணிக்கு ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×