search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் பயங்கரம்- பழங்குடியின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
    X

    மணிப்பூரில் பயங்கரம்- பழங்குடியின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை

    • வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தனர்.
    • தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53 சதவீதம்) உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிர்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.

    மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

    இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சார்ந்த பயங்கரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனா்.

    இந்நிலையில், மலைப் பகுதி மாவட்டமான ஜிர் பாமில் குகி-ஸோ பழங்குடியினா் வசிக்கும் ஜைரான் ஹமா் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தனா்.

    இதில் 17 வீடுகள் தீக்கிரையாகின. கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதனால், வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தனா்.

    இத்தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக பழங்குடியின அமைப்பினா் தெரிவித்தனா். அந்த பெண் எதிர் தரப்பு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து மிக கொடூரமாக தாக்கப்பட்டு பிறகு எரித்து கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. இதனால் மணிப்பூரில் பதட்டம் நிலவுகிறது.

    மேலும், தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

    Next Story
    ×