search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடி பதவியேற்பு விழா: அண்டை நாடுகளின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு
    X

    மோடி பதவியேற்பு விழா: அண்டை நாடுகளின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு

    • பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
    • நேபாளம், பூடான், இலங்கை பங்களாதேஷ் மற்றும் மொரீஷியஸ் தலைவர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது.

    ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.

    இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கியது.

    அதன்படி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து நாட்டின் அடுத்த பிரதமராக 8-ந் தேதி மாலையில் மோடி மீண்டும் பதவி ஏற்பார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருடன் புதிய மந்திரி சபையும் பதவி ஏற்கும் என தெரிகிறது.

    பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.

    இவற்றை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி முர்மு, புதிய அரசு பதவி ஏற்கும் வரை பிரதமரும், மந்திரிகளும் தங்கள் பதவிகளிலேயே தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், இலங்கை பங்களாதேஷ் மற்றும் மொரீஷியஸ் தலைவர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் வெற்றிக்கு ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரை பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, முறையான அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று கூறி அழைப்பு விடுத்தார்.

    மேலும் பூடான் பிரதமர், மொரீஷியஸ் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பதன் மூலம், கடந்த 1962-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆளும் அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வருகிறது. நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கு பிறகு, அந்த பெருமையை மோடி பெறுகிறார்.

    Next Story
    ×