search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தலில் புதிய வியூகம்: அடுத்த வாரம் வெளியாகும் பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல்
    X

    பாராளுமன்ற தேர்தலில் புதிய வியூகம்: அடுத்த வாரம் வெளியாகும் பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல்

    • 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.
    • தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வந்து விட்டது. தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது.

    வருகிற 22-ந்தேதி அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மே மாதம் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்ற நிலையில் சற்று முன் கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தடவை 400 முதல் 450 தொகுதிகளுக்கு குறி வைத்து இருக்கிறது. அதாவது மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    இதற்காக 543 தொகுதிகளிலும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாரதிய ஜனதா வேட்பாளர் தேர்வை நடத்தி வருகிறது. 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.

    பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக அதாவது பலவீனமாக கருதப்படும் தொகுதிகள் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர். தமிழகத்தில் 36, ஆந்திராவில் 25, மராட்டியத்தில் 24, மேற்குவங்காளத்தில் 23, கேரளாவில் 20, உத்தரபிரதேசத்தில் 12, பீகாரில் 12, ஒடிசாவில் 12, தெலுங்கானாவில் 12 என 140 தொகுதிகள் மிக மிக பலவீனமான தொகுதிகளாக கணக்கெடுத்துள்ளனர்.

    மேலும் 20 தொகுதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு 160 தொகுதிகளை அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    வடமாநிலங்களில் மகர சங்கராந்தி வரை நல்ல காரியங்கள் எதையும் தொடங்கமாட்டார்கள். 15-ந்தேதி தை மாதம் பிறந்த பிறகுதான் அவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட தொடங்குவார்கள். எனவே பாரதிய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    குறிப்பாக 15-ந்தேதி முதல் 22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அதிரடியாக அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி 14-ந் தேதிக்குள் 2-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அறிவிக்கும் என்று பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    முதல் மற்றும் 2-வது வேட்பாளர் பட்டியலில் 70 முதல் 75 சதவீதம் வரை புதுமுக வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்றும் பாரதிய ஜனதா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழகத்திலும் வேட்பாளர் தேர்வு ஓசையின்றி நடப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு தெரியாமல் சில பட்டியலை மேலிடம் தயாரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவின் 2024-ம் ஆண்டு தேர்தல் வியூகங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    Next Story
    ×