search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிபா வைரஸ் எதிரொலி: தேசிய நிபுணர்கள் குழு கேரளாவில் முகாம்
    X

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் கவச உடையணிந்த சுகாதார பணியாளர்கள் பணியாற்றுவதையும், பரிசோதனை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதையும் காணலாம்.

    நிபா வைரஸ் எதிரொலி: தேசிய நிபுணர்கள் குழு கேரளாவில் முகாம்

    • பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது.
    • தொற்று அறிகுறிகள் உள்ள 19 பேர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் பருவமழை தீவிரமடைந்ததால் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்தது.

    அங்கு வழக்கமான காய்ச்சல்களான டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவின. காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

    இந்தநிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரசுக்கு பலியானான். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களமிறங்கியது. பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது.

    குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என 460 பேர் தொடர்பு பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஆபத்தான பிரிவில் 220 பேர் உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தொற்று அறிகுறிகள் உள்ள 19 பேர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்கள் 17 பேருக்கான பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

    இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 21 நாள் தனிமைப்படுத்தலை தொடரவேண்டும் என்றும், நெறிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மந்திரி தெரிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழு கேளா வந்தது. அவர்கள் தொற்று பாதித்த பகுதியில் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் புனே வைராலஜி நிறுவனத்தில் இருந்து ஒரு மொபைல் பரிசோதனை வாகனம் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளது. அந்த வாகனத்தில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சேகரிக்க்ப்படும் மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பரவலை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அனக்காயம் மற்றும் பாண்டிக்காடு ஊராட்சிகளில் 7ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று காய்ச்சல் பாதிப்பு பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர்.

    அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அது மட்டுமின்றி இந்த 2 ஊராட்சிகளிலும் 18ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர்.

    Next Story
    ×