search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் நிபா வைரசுக்கு வாலிபர் பலி: மலப்புரத்தில் 1,928 வீடுகளில் சுகாதாரத்துறையினர் கள ஆய்வு
    X

    கேரளாவில் 'நிபா' வைரசுக்கு வாலிபர் பலி: மலப்புரத்தில் 1,928 வீடுகளில் சுகாதாரத்துறையினர் கள ஆய்வு

    • முதன்மை தொடர்பு பட்டியலில் மட்டும் 126பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • மாம்பாடு கிராம பஞ்சாயத்தில் 590 வீடுகள், வண்டூரில் 447, திருவாலியில் 891 என மொத்தம் 1,928 வீடுகளில் நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கேரளாவில் 'நிபா' வைரசுக்கு வாலிபர் பலிதிருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் பரவியது. பின்பு 2019, 2021, 2023 மற்றும் இந்த ஆண்டிலும் நிபா வைரஸ் பரவியது. இந்நிலையில் அங்கு தற்போதும் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டார். அவரது உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், புனேயில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதித்தபோது அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது.

    மேலும் மலப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று 2 முறை அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மலப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் கூட்டம் கூட தடை, திருமணம்-இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை கட்டாயமாக குறைக்க வேண்டும், காய்கறிகள்-பழங்களை நன்றாக கழுவி சுத்தம்செய்த பிறகே பொதுமக்கள் சமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் தொற்று பாதித்து பலியான வாலிபரின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயாரித்தனர். அதில் 74 சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 175பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    முதன்மை தொடர்பு பட்டியலில் மட்டும் 126பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அதிகம் ஆபத்து உள்ளவர்களாக குறிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நிபா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களாக கருதப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு உதவும் விதமாக மலப்புரத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் தொற்று பரவலை முழுமையாக கண்டறியும் வகையில் இறந்த வாலிபரின் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள இடங்களில் சுகாதாரத்துறையினர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாம்பாடு கிராம பஞ்சாயத்தில் 590 வீடுகள், வண்டூரில் 447, திருவாலியில் 891 என மொத்தம் 1,928 வீடுகளில் நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாம்பாடு மற்றும் வண்டூரில் தலா 10 பேருக்கும், திருவாலியில் 29 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் கல்வி நிலையங்கள், டியூசன் சென்டர்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவைகள் இயங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    Next Story
    ×