search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா ரெயில் விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 110 பக்தர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
    X

    பெங்களூரு-ஹவுரா ரெயிலில் பயணம் செய்தவர்கள் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம்.

    ஒடிசா ரெயில் விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 110 பக்தர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்

    • பெங்களூரு-ஹவுரா ரெயிலில் கர்நாடகத்தை சேர்ந்த 110 பேர் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.
    • கடவுள் அருளால் 110 பேரும் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளனர்.

    பெங்களூரு :

    ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள் சிக்கின. இதில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்று. இந்த சங் கிலி தொடர் விபத்தில் 288 பேர் பலியானார்கள். மேலும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில், பெங்களூரு-ஹவுரா ரெயிலில் கர்நாடகத்தை சேர்ந்த 110 பேர் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். அதாவது சிக்கமகளூரு மாவட்டம் கலசா, ஒரநாடு, உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த அவர்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.

    ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் 24-வது சமண தீர்த்தங்கரர் முக்தி பெற்ற தலமான ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த ரெயில் விபத்தில் சிக்கினாலும், 110 பேரும் பயணம் செய்த ரெயில் பெட்டிகள் விபத்தில் இருந்துதப்பின. இதனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

    இந்த நிலையில் 110 பேரும் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதாவது, 110 பேரும் 30-ந்தேதி சிக்கமகளூரு மாவட்டம் ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் கூடினர். அங்கு அவர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கோவில் முன்பு அவர்கள் குழு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து வாகனங்களில் பெங்களூரு பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில்வே முனையத்துக்கு 31-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு வந்துள்ளனர். ஆனால் காலை 10.30 மணிக்கு வரவேண்டிய ரெயில் 2 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு வந்துள்ளது. அதன் பிறகே அவர்கள் எஸ் 5, எஸ்.6 மற்றும் 7-வது ரெயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்துள்ளனர்.

    அவர்கள் பயணித்த ரெயில்பெட்டி கடைசியில் இருந்துள்ளது. அந்த ரெயிலின் என்ஜின் விசாகப்பட்டினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 110 பேர் பயணம் செய்த 3 ரெயில் பெட்டிகளும் முன்னால் சென்றுள்ளது.

    அதன்பிறகு தான் ஒடிசா அருகே பெங்களூரு-ஹவுரா ரெயில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் கடைசி 2 பொதுப்பெட்டிகளும், ஒரு பிரேக் வேனும் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் 110 பேர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

    இதுகுறித்து 110 பேரில் பயணம் செய்யும் மால பிரகாஷ் ஜெயின் என்பவரின் சகோதரர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிக்கமகளூருவில் இருந்து 110 பக்தர்கள் அஜித்குமார் ஜெயின் என்பவர் தலைமையில் பெங்களூரு-ஹவுரா ரெயிலில் புறப்பட்டு சென்றனர். இதில் எனது அண்ணன் மால பிரகாஷ் ஜெயின், அண்ணி லாவண்யாவும் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பயணித்த ரெயில் பெட்டிகள் சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட போது, கடைசியில் இருந்தது. இடையில் ரெயில் என்ஜின் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பயணித்த பெட்டிகள் என்ஜினுக்கு அடுத்தபடியாக முன்னோக்கி இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் விபத்தில் சிக்கி, கடைசி 2 பொதுப்பெட்டியும், ஒரு பிரேக் வேனும் சிக்கியுள்ளன. இதனால் 110 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் மாற்று ரெயில் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். கடவுள் அருளால் 110 பேரும் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×