search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்த பினராயி விஜயன்
    X

    கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்த பினராயி விஜயன்

    • அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.
    • கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, ஜனநாயக கேரள காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (எஸ்), கேரள காங்கிரஸ் (பி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு, முதல் 2½ ஆண்டுகளும், மேலும் உள்ள 2 பேருக்கு அடுத்த 2½ ஆண்டுகளும் மந்திரி பதவி வழங்குவது என தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி முதல் 2½ ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர். புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகள் கணேஷ்குமார், கடனம்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருடன் வனத்துறை மந்திரி சசீந்திரன் மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

    முன்னதாக பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் இருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டபோது, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×