search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது
    X

    பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது

    • சூரஜ் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட சேத்தன், பெங்களூருவில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • புகார், ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா. பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். அவர் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் அவரால் பாதிக்கப்பட்ட மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக எச்.டி.ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமினில் இருந்து வருகிறார். அதுபோல் இந்த வழக்கில் அவரது மனைவி பவானி ரேவண்ணாவும் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. ஆனார். இந்த நிலையில் அவர் மீது ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு பகுதியைச் சேர்ந்த சேத்தன் என்பவர் ஓரினச்சேர்க்கை புகார் அளித்துள்ளார். ஆனால் அவர், சூரஜ் ரேவண்ணாவிடம் வேலை கேட்டு வந்ததாகவும், அப்போது சூரஜ் ரேவண்ணா வேலை இல்லை என்று கூறிவிட்டதால், ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் போலீசில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிப்பேன் என்றும் சேத்தன், சூரஜ் ரேவண்ணாவிடம் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் சூரஜ் ரேவண்ணாவின் நெருங்கிய நண்பர் சிவக்குமார் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்தன் மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 384(மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் 506(மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சூரஜ் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட சேத்தன், பெங்களூருவில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் சூரஜ் ரேவண்ணா தன்னை, ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள ஒரு பண்ணை தோட்டத்து வீட்டுக்கு அழைத்ததாகவும் அங்கு வைத்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். அந்த புகார், ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர் அந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஒலேநரசிப்புரா புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த புகாரை பெற்ற போலீசார், சூரஜ் ரேவண்ணா மீது இந்திய தண்டனைச் சட்டம் 377(இயற்கைக்கு மாறான உறவு), 342(சட்டத்தை மீறி ஒருவரை அடைத்து வைத்தல்) மற்றும் 506(மிரட்டல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாலை 5 மணி அளவில் சேத்தன், ஒலேநரசிப்புரா புறநகர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சூரஜ் ரேவண்ணா மீது புகார் அளித்தார்.

    இதற்கிடையே சேத்தன், சூரஜ் ரேவண்ணா தன்னை மிரட்டியது குறித்த ஆடியோ இருப்பதாக கூறி உள்ளதால், ஹாசன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சூரஜ் ரேவண்ணாவை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஆடியோ விவகாரம் குறித்து அவரிடம் போலீசார் கேட்டதாக தெரிகிறது. மேலும் சூரஜ் ரேவண்ணாவின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்து சூரஜ் ரேவண்ணாவும் கைதாகி உள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×