search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டின் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அவமானம் - கங்கனா ரனாவத் கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்
    X

    நாட்டின் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அவமானம் - கங்கனா ரனாவத் கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்

    • 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் பாஜக எம்.பி கூறுகிறார்
    • உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார்.

    பாலியல் பலாத்காரங்களும் தூக்கில் தொங்கிய உடல்களும்

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை வங்கதேச வன்முறையோடு ஒப்பிட்டு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சர்ச்சையில் சிக்கியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. எங்கும் சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது, இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என்று கங்கனா பேசியுள்ளார்.

    வெட்ட வெளிச்சம்

    விரைவில் அரியானா சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் கங்கானாவின் இந்த கருத்துக்கு பாஜக மேலிடமே கண்டனம் தெரிவித்துள்ளது. தான் பேசியதற்கு கங்கனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கங்கானாவின் கருத்து பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

    கீழ்த்தரமான கருத்து

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் தள பதிவில், அளித்த வாக்குறுதிகளை நிறவேற்றத் தவறிய மோடி அரசின் பிரச்சார இயந்திரம் விவசாயிகளை தொடர்ச்சியாக அவமானப் படுத்தி வருகிறது. தங்களின் 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் ஒரு பாஜக எம்.பி கூறுவது பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுள்ள மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானம் ஆகும். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உருவாக்கிய கமிட்டி இன்னும் செயல்படாமல் உறைந்து கிடக்கிறது. இதுநாள் வரை தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இன்றைய தேதி வரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளைத் தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று கடுமையாக சாடியுள்ளார்

    பாஜகவின் மரபணு

    கங்கனா ரணாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியே பாராளுமன்றத்தில் வைத்து விவசாயிகளை கிளர்ச்சிக்காரர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் கீழ்த்தரமாகப் பேசினார். பொய்யான வாக்குறுதிகளால் விவசாயிகளை ஏமாற்ற முற்பட்டார். உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார். எனவே மோடி அரசின் மரபணுவிலேயே ஊறியுள்ள இந்த விவசாய எதிர்ப்பு மனநிலை கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

    மதவாத ஆங்கிலேய கைக்கூலிகள்

    கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு அகில இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) விவசாய சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா, காலநிலை என எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 736 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால் சுதந்திரப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்து, ஆங்கிலேயர் பக்கம் நின்ற மதவாத கைக்கூலிகளுக்கு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் தேசபக்தி குறித்து கேள்வியெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்துகளுக்காகப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் தெரிவித்தார்.

    Next Story
    ×