search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் கோவில் திறப்பு அன்று பாஜக அலுவலகத்தை தகர்க்க சதி: ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்
    X

    ராமர் கோவில் திறப்பு அன்று பாஜக அலுவலகத்தை தகர்க்க சதி: ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

    • பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி இரண்டு குண்டுகள் வெடித்ததில் 9 பேர் காயம்.
    • குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தது. இதில் ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக முசாவீர் உசேன் சாஜிப், அப்துல் மதீன் அகமது தாகா, மாஸ் முனீர் அகமது, முஜாமில் ஷெரீப் ஆகிய 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் 4 பேர் மீதும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவமொகா மாவட்டத்தை சேர்ந்த முசாவீர், அப்துல் மதீன் ஆகிய 2 பேரும், தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டு வந்துள்ளனர்.

    இதுபோன்று, மற்ற 2 பயங்கரவாதிகளான மாஸ் முனீர் அகமது, முஜாமில் ஷெரீப்பும் தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை, பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்திய சிம் கார்டுகள், இந்திய வங்கி கணக்குகளை வைத்திருந்ததுடன், வங்காளதேச நாட்டின் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களையும் டார்க் நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தார்கள்.

    அத்துடன் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் முகமது சகீத் பைசலுக்கு, சோயிப் அகமது மிர்ஜியை அறிமுகம் செய்து வைத்திருந்ததும் அப்துல் மதீன் அகமது தாகாதான் என்பதும் தெரியவந்தது. அல்ஹிந்த் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது சகீத் பைசலை தனது தலைமை அதிகாரியாகவும் அப்துல் மதீன் அகமது தாகா கொண்டு செயல்பட்டார்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கர்நாடக பா.ஜனதா தலைமை அலுவலத்தைதான் பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 1-ந்தேதி ராமேஸ்வரம் கபே ஓட்டலில் 2 வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வெடிக்க செய்திருந்தார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கடந்த ஜனவரி 22-ந்தேதி பெங்களூருவில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தை குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததாலும், அலுவலகத்திற்குள் செல்ல முடியாத காரணத்தாலும், எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டத்துடன் இருக்கும் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பை அரங்கேற்றியது என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மூலமாக அம்பலமாகி உள்ளது.

    Next Story
    ×