search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சபரிமலை மகரவிளக்கு சீசன் - 120 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
    X

    சபரிமலை மகரவிளக்கு சீசன் - 120 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

    • கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர்.
    • தேர்வு செய்யப்படும் 120 போலீசார் சன்னிதானத்தில் 3 கட்டங்களாக பணியில் இருப்பார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடியே தான் இருக்கும். இதனால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிகைகளை கேரள மாநில அரசு எடுக்கும்.

    கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். அதுபோன்று வருகிற ஆண்டுகளில் நடக்காது என்று கேரள அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. அதற்கு தகுந்தாற்போல் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் அடுத்தமாதம் (நவம்பர்) 15-ந்தேதி திறக்கப்படுகிறது. டிசம்பர் 26-ந்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் இந்த மாத தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.

    முக்கியமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்ய உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு என்பது கட்டாயமாக இருக்கிறது. ஸ்பாட் புக்கிங் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வருகை எப்படியும் அதிகமாக இருக்கும் என்பதால், பதினெட்டாம் படியில் பக்தர்களை விரைவாக ஏற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பதினெட்டாம் படியில் பக்தர்கள் சிரமமின்றி ஏறுவதற்கு அங்கு போலீசார் பணிய மர்த்தப்பட்டு இருப்பார்கள்.

    அவர்கள் பதினெட்டாம் படியின் இரு புறங்களிலும் ஓரமாக அமர்ந்துகொண்டு, படியேறும் பக்தர்களுக்கு உதவுவார்கள். மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், பக்தர்களை வேகமாக படியேற்றி விடுவார்கள். பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்போது கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசாரின் இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    அந்த பணிக்கு தற்போதைய சீசன் காலத்தில் முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் வார நாட்களில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஒரு நிமிடத்திற்கு 65 பக்தர்களையும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நிமிடத்திற்கு 80 பக்தர்களையும் பதினெட்டாம் படி ஏறச்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக 120 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் அனுபவம் வாய்ந்தவர்களும், 50 சதவீதம் புதிய பணியாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் 120 போலீசார் சன்னிதானத்தில் 3 கட்டங்களாக பணியில் இருப்பார்கள்.

    மேலும் அவர்களுக்கு பக்தர்களை பதினெட்டாம் படியில் விரைவாக ஏறச் செய்ய 10 நாட்கள் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி சன்னிதானத்தில் 30 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    போக்குவரத்தை கட்டுப்படுத்த சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் எரிமேலியில் 5 நிலைகளாக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பம்பை முதல் சன்னிதானம்ம வரை 60 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த கேமராக்கள் பம்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு உரிய அறிவுரைகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

    சபரிமலையில் பாதுகாப்பு தொடர்பாக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக தேவசம்போர்டு மந்திரி தலைமையில் பம்பையில் 29-ந்தேதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×