search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்- 13 வயது சிறுமியை கடத்தி 15 ஆண்களுக்கு விற்பனை செய்த கும்பல்
    X

    கைதான கும்பலை படத்தில் காணலாம்.

    குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்- 13 வயது சிறுமியை கடத்தி 15 ஆண்களுக்கு விற்பனை செய்த கும்பல்

    • ஒரு கும்பல் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்துள்ளது.
    • கைதான அசோக் பட்டேல் கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள கன்பா கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் காந்தி நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த அசோக் பட்டேல், அவரது மனைவி ரேணுகா (வயது 45), இவர்களது 16 வயது மகன் மற்றும் ரூபல் மெக்வான் (34) என்ற பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களது கூட்டாளிகளான மான்சா பகுதியை சேர்ந்த மோதி சென்மா (50) மற்றும் பாலன்பூரை சேர்ந்த அம்ரத் தாகூர் (70), சேகர்சிங் சோலங்கி (34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான அசோக் பட்டேல் இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும் மெக்வான் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி நைசாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் பின்னர் அந்த சிறுமிகளுக்கு நிறைய பரிசுகள் மற்றும் ஆடைகள் கிடைக்கும் என்று கூறி அவர்களை பலருக்கு விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு முதலே இந்த கும்பல் இதே போன்று சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சம்பாதித்து வந்துள்ளனர்.

    மேலும் சில சிறுமிகளை திருமண ஆசை காட்டி மணமகள் என கூறி ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இந்த கும்பலின் கூட்டாளிகள் மூலம் பல ஆண்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் இந்த கும்பல் 8 சிறுமிகளை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் சிறுமிகளை தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கும்பலின் பிடியில் உள்ள சிறுமிகளை மீட்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×