என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி: தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆகிறார்
- பட்னாவிஸ் 3-வது முறையாக மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு முன்பு 2014 முதல் 2019 வரை 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தனர்.
- 2019 தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் 5 நாட்கள் பதவி வகித்தார். பெரும்பான்மை இல்லாததால் பொறுப்பு ஏற்ற 5-வது நாளில் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கி இருந்து நெருக்கடி அளித்து வந்தனர்.
மொத்தம் உள்ள 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றதால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த சிவசேனா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து ஆட்சியை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டு உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக இருந்தது. ஜூலை 31-ந்தேதி வரை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கவர்னர் பகத்சிங் கோஷியா ரியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார். அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும் பட்னாவிஸ் கூறினார்.
இதையடுத்து மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் உத்தரவிட்டார். சிறப்பு சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூட்டி மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
சட்டசபை முதன்மை செயலாளர் ராஜேஷ் பாகவத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனா தரப்பில் சுப்ரீம் கோட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பிர்தி வானே ஆகியோர் அடங்கிய கோடைக்கால அமர்வு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணை நடத்தியது. இரவு 9 மணியளவில் விசாரணையை முடித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க போவதில்லை. அதே நேரம் இந்த மனு மீது பதில் அளிக்குமாறு சட்டசபை செயலாளர் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். இதற்கு 5 நாட்களில் பதில் அளிக்கலாம்.
அந்த பதில் மனுவின் தகுதியின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பான மற்ற வழக்குகள் சேர்த்து ஜூலை 11-ந்தேதி விசாரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த மனுக்கள் மீதான விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி முடிவுக்கு உட்பட்டது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "சட்டசபையில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பம் இல்லை. முதல்-மந்திரி பதவியையும், சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார்.
பெரும்பான்மை இல்லாததால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே இரவு 11.44 மணியளவில் கவர்னர் மாளிகை சென்று கோஷியாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவருடன் அவரது மகன்கள் ஆதித்ய தாக்கரே, தேஜாஸ், சிவசேனா தலைவர்கள் நீலம் கோர்கே அரவிந்த் சாவந்த் ஆகியோர் உடன் சென்றனர்.
ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே பதவி விலகியதால் இன்று நடைபெற இருந்த மகாராஷ்டிரா சிறப்பு சட்டசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
உததவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது.
அந்த கட்சிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 11 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.
மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி என்று மாநில பா.ஜனதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜனதா மேலிட பார்வையாளர் டி.ரவி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுகிறார்.
முன்னதாக அவர் மும்பை திரும்பிய சிவசேனா அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டேயும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பா.ஜனதா ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு கவர்னரை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கவர்னர் கோஷியாரை இன்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள். தங்களுக்கு 156 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு (பா.ஜனதா 106, சிவசேனா அதிருப்தி 40, சுயேட்சை 10) இருக்கும் கடிதத்தை கவர்னரிடம் அளிக்கிறார்.
இதை தொடர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுவார். தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். இதைத்தொடர்ந்து அவர் நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்னாவிஸ் 3-வது முறையாக மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு முன்பு 2014 முதல் 2019 வரை 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தனர்.
2019 தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் 5 நாட்கள் பதவி வகித்தார். பெரும்பான்மை இல்லாததால் பொறுப்பு ஏற்ற 5-வது நாளில் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.
தற்போது சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து அதிருப்தி குழுவின் ஆதரவுடன் பட்னாவிஸ் 3-வது தடவை முதல்-மந்திரியாகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்