search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினர்...
    X

    வயநாடு தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினர்...

    • வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது.
    • பிரசார வியூகம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததை தொடர்ந்து, அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    அதேபோன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதனால் கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன.

    வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் தொகுதியில் பிரியங்கா காந்தி படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டத் தொடங்கியுள்ளனர்.

    அதுமட்டுமின்றி தொகுதி முழுவதும் பேனர்களை அமைத்து வருகின்றனர். மேலும் பிரசார வியூகம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். 2009-ம் ஆண்டு முதல் வயநாடு தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது.

    அதனை தக்க வைத்துக் கொள்ளவும், பிரியங்கா காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையிலும் தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்திருக்கின்றனர். அதற்கு தகுந்தாற் போல் வியூகம் வகுத்து வருகிறார்கள்.

    வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் போட்டியிடுகின்றன. அந்த கட்சிகள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்னும் இறுதி செய்யவில்லை. அவர்கள் யாரை நிறுத்துவது? என்று கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.

    கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் விவரம் இன்று தெரியவரும் எனவும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது.

    பாலக்காடு தொகுதியில் ராகுல் மம்கூட்டத்தில், செலக்கரா தொகுதியில் முன்னாள் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவரும் விரைவிலேயே பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட்டு விடும். அதன்பிறகு அந்த தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.

    Next Story
    ×