search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அ.தி.மு.க. சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடைவிதிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க. சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடைவிதிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு

    • எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர்.
    • கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு மற்றும் விளக்க மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு பரஸ்பரம் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் வழக்கை ஒத்திவைக்க கோரப்பட்டது.

    அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர்.

    அந்த கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    அதன்படி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அச்சமயத்தில் அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உள்ளார்

    மேலும், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.

    இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் வரும் 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×