search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாட்ஸ்-அப்பில் படங்களை அனுப்பி 50 குழந்தைகள் கடத்தி விற்பனை: ஆந்திராவில் 16 குழந்தைகள் மீட்பு

    • 8 முக்கிய குற்றவாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    • விசாரணையில் பல்வேறு இடங்களில் குழந்தைகளை கடத்தி கும்பல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகளை விலைக்கு வாங்கியும் கடத்தி சென்றும் கும்பல் விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 22-ந்தேதி ஆந்திர மாநிலம் பிர்ஜாதி குடா ஆஸ்பத்திரியில் ஏழை பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் அதன் தாயார் திணறினார்.

    இதனை அறிந்த அந்த ஆஸ்பத்திரி ஊழியர் சோபா ராணி என்பவர் நைசாக குழந்தையின் தாயிடம் பேசி அதனை விற்பனை செய்து விடலாம் என தெரிவித்தார்.

    இதனையடுத்து ரூ.4.5 லட்சம் பேரம் பேசி குழந்தையை விஜயவாடாவை சேர்ந்த தம்பதியிடம் விற்பனை செய்தனர். சோபா ராணி குழந்தையை விற்பனை செய்த சம்பவம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விஜயவாடாவை சேர்ந்த கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தைகள் விற்பனை செய்த 11 பேரை மடக்கிப் பிடித்தனர். இதில் 8 முக்கிய குற்றவாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    விசாரணையில் பல்வேறு இடங்களில் குழந்தைகளை கடத்தி கும்பல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த கும்பல் விற்பனை செய்த 16 குழந்தைகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் ஆண் குழந்தைகள் மற்றவை அனைத்தும் பெண் குழந்தைகள். மீட்கப்பட்ட குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நாடு முழுவதும் செயல்படுவது தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் புனேவில் அதிக அளவில் புரோக்கர்கள் உள்ளனர்.

    அவர்கள் மாநிலங்கள் வாரியாக குழந்தை விற்பனை செய்ய கும்பல்களை நிறுவி உள்ளனர்.

    அந்த கும்பல்கள் குழந்தை இல்லாத பெற்றோர்களை அணுகி பேரம் பேசுகின்றனர். பின்னர் டெல்லி மற்றும் புனேவில் உள்ள புரோக்கர்களை தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி விடுகின்றனர்.

    எந்த குழந்தை பிடிக்கிறதோ அந்த குழந்தைகளுக்கு ஏற்றபடி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர்.

    நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 50 பச்சிளம் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளதாக பிடிபட்ட கும்பல் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் ஆந்திர மாநில போலீசார் அந்த குழந்தைகளை மீட்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். டெல்லி, புனேவைச் சேர்ந்த கும்பல் சிக்கினால் நாடு முழுவதும் கடத்தி விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளை மீட்க முடியும்.

    இதனால் அவர்களை தேடி தனிப்படை போலீசார் டெல்லி மற்றும் புனேயில் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    முதலில் குழந்தை விற்பனை என்பதை சாதாரணமாக தான் பார்த்தோம். ஆனால் விசாரணையில் அது நீண்டு கொண்டே சென்றது.

    இதுவரை 16 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லி, புனேவை சேர்ந்த கும்பல்கள் நாடு முழுவதும் குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிடிபட்டால் மேலும் பல குழந்தைகள் மீட்கப்படுவார்கள்.

    மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த அடையாளங்கள் மூலம் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×