search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொதுமக்களிடம் வீடு தேடி சென்று குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ரோஜா
    X

    பொதுமக்களிடம் வீடு தேடி சென்று குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ரோஜா

    • நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரோஜா நகரியில் நேற்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • பொதுமக்கள் அமைச்சர் ரோஜாவுக்கு மாலை அணிவித்தும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்வதற்காக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக எம்.எல்.ஏக்களை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல் எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் எப்படியாவது ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆந்திரா முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆளும் கட்சியில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    சமீபத்தில் சந்திரபாபு நாயுடு நகரி தொகுதியில் உள்ள புத்தூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தினார். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது சந்திரபாபு நாயுடு அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

    அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொது மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என கேட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரோஜா நகரியில் நேற்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பொதுமக்கள் அமைச்சர் ரோஜாவுக்கு மாலை அணிவித்தும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்டவை கிடைக்கிறதா? ரேசன் பொருட்கள் சரியான அளவில் வீடு தேடி வருகிறதா, வீட்டு மனை, பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் வர இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ஆந்திராவில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருவதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

    Next Story
    ×