search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுவதும் 24 முறை ரெயில்களை கவிழ்க்க நாச வேலை- ரெயில்வே அதிர்ச்சி தகவல்
    X

    நாடு முழுவதும் 24 முறை ரெயில்களை கவிழ்க்க நாச வேலை- ரெயில்வே அதிர்ச்சி தகவல்

    • ரெயில் ஓட்டுனர் அவசர பிரேக் போட்டு நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • அதிகபட்சமாக 2019-ம் ஆண்டு மட்டும் 55 விபத்துகள் பதிவாகி உள்ளன.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற பாகுமதி எக்ஸ்பிரஸ் கடந்த 12-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர், தெற்கு ரெயில்வேயை சேர்ந்த உயர் அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில், பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளாவதற்கு நாசவேலையே காரணம் என்று சந்தேகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயிலை கவிழ்த்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்சிகள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. ரெயிலை கவிழ்க்க நடைபெற்ற பெரும்பாலான முயற்சிகள் ரெயில் ஓட்டுனர்கள், 'கார்டுகள்', ரெயில்வே ஊழியர்களால் வெற்றிக்கரமாக முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயத்தில் தவிர்க்க முடியாத சில இடங்களில் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளன.

    உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து நேற்று முன்தினம் லக்சர் நோக்கி சென்ற சரக்கு ரெயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் வைத்து சதி செய்யப்பட்டு இருந்தது. இதனை ரெயில் என்ஜின் டிரைவர் கவனித்ததால், விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த மாதம் 19-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்புர் ரோடு மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் இடையே 'தூன்' எக்ஸ்பிரஸ் சென்றுக்கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் குறுக்காக 7 அடி நீள இரும்பு கம்பி போடப்பட்டிருந்தது.

    ரெயில் ஓட்டுனர் அவசர பிரேக் போட்டு நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற 2 நாட்களுக்கு பின்னர் அதாவது 21-ந் தேதி பாந்த்ரா ஏழைகளின் ரதம் ரெயில் கடந்து செல்ல இருந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் அருகே தண்டவாளத்தை தரையில் போடப்பட்டு இருக்கும் காங்கிரீட் சிலாப்புகளோடு இணைக்கும் இரும்பு தகடுகளை மர்ம ஆசாமிகள் நீக்கியிருந்தனர். சரியான நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. இதனை சரக்கு ரெயில் ஓட்டுனர் கண்டுபிடித்ததால் விபத்து தப்பியது.

    இதுபோன்று கடந்த சில மாதங்களில் மட்டும் ரெயில் தண்டவாளத்தில் சிமெண்டு மூட்டை, சைக்கிள், கியாஸ் சிலிண்டர், இரும்பு கம்பி என வெவ்வேறு பொருட்களை வைத்து ரெயிலை கவிழ்க்கும் நாசவேலைக்கான முயற்சிகள் 24 முறை நடைபெற்றுள்ளதாகவும், இதில் 90 சதவீத முயற்சிகள் ரெயில் ஓட்டுனர், கார்டுகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஆகஸ்டு மாதம் வரை நாடு முழுவதும் 218 ரெயில் விபத்துகள் அரங்கேறி இருப்பதாகவும், 145 ரெயில்கள் தடம் புரண்டுள்ளதாகவும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்து பெற்ற தகவலில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 2019-ம் ஆண்டு மட்டும் 55 விபத்துகள் பதிவாகி உள்ளன. இதேபோல அதே ஆண்டு 40 ரெயில்கள் தடம் புரண்டு விபத்தினை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×