search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஊக்கம் தருபவராக இருந்தார்- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
    X

    இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஊக்கம் தருபவராக இருந்தார்- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

    • மற்றவர்களின் கனவுகளுக்கு ரத்தன் டாடா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும்.
    • தனிப்பட்ட முறையில், பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, தனது 86-வது வயதில் கடந்த மாதம் 9-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது சிறந்த வாழ்க்கை மற்றும் அசாத்திய பணிகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கட்டுரை ஒன்றை எழுதி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரத்தன் டாடா நம்மை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகிறது. அவர் நம்மிடையே இல்லாதது, பரபரப்பான பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரையிலும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் ஆழமாக உணரப்படுகிறது. நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அது எதிரொலிக்கிறது.

    இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஓர் உத்வேகமாக இருந்தார். கனவுகள் தொடரத் தகுந்தவை என்பதை நினைவூட்டிய ஆளுமை. வெற்றி என்பது இரக்கம் மற்றும் பணிவுடன் இணைந்திருக்கும் என்பதை ஞாபகப்படுத்தியவர்.

    அவரது தலைமையிலான டாடா குழுமம் உலக அளவில் பிரபலம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பெற்று புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும், அவர் தனது சாதனைகளைப் பணிவுடனும், கருணையுடனும் எளிதாக ஏற்றுக்கொண்டார்.

    மற்றவர்களின் கனவுகளுக்கு ரத்தன் டாடா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும். அண்மை காலங்களில், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்புக்கு வழிகாட்டியாகவும், பல நம்பிக்கைக்குரிய முயற்சிகளில் முதலீடு செய்பவராகவும் இருந்தார்.

    இளம் தொழில்முனைவோர்களின் நம்பிக்கைகளை, விருப்பங்களை அவர் புரிந்துகொண்டார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க அவர்களிடம் இருக்கும் திறனை அங்கீகரித்தார். அவர்களின் முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், கனவுகாணும் தலைமுறைக்கு தைரியமான முடிவுகளை எடுக்கவும், எல்லைகளை நோக்கி முன்னேறவும் அதிகாரம் அளித்தார்.

    மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான புகழ்பெற்ற தாஜ் ஓட்டலை விரைவாக திறந்தது, இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது, பயங்கரவாதத்திற்கு அடிபணிய மறுக்கிறது என தேசத்திற்கு அணிதிரளும் ஓர் அறைகூவலாக மாறியது.

    தனிப்பட்ட முறையில், பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நாங்கள் குஜராத்தில் நெருக்கமாக பணியாற்றினோம். அங்கு அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த பல திட்டங்கள் உள்பட விரிவான முதலீடுகளை செய்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு, ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்சுடன் நான் வதோதராவில் இருந்தேன். இந்தியாவில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலை வளாகத்தை நாங்கள் கூட்டாகத் தொடங்கி வைத்தோம். ரத்தன் டாடாதான் இதற்கான பணிகளைத் தொடங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அவரது வருகை இல்லாதது பெரும் குறை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    நான் மத்திய அரசு பொறுப்புக்கு சென்ற பிறகும் எங்களுடைய நட்பு தொடர்ந்தது. நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அவர் ஓர் உறுதியான பங்குதாரராக இருந்தார். குறிப்பாக, 'தூய்மை இந்தியா' இயக்கத்திற்கு ரத்தன் டாடா அளித்த ஆதரவு என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தூய்மை, சுகாதாரம், துப்புரவு ஆகியவை இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டு, இந்த வெகுஜன இயக்கத்திற்குக் குரல் கொடுப்பவராக இருந்தார்.

    அவரது இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு செயல் மருத்துவம். குறிப்பாக புற்றுநோய்க்கு எதிரான போராட்டம். 2 ஆண்டுகளுக்கு முன்பு அசாமில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலத்தில் பல்வேறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாங்கள் இணைந்து தொடங்கி வைத்ததை நினைவுகூர்கிறேன். அந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில், தனது இறுதி ஆண்டுகளை மருத்துவத்திற்கு அர்ப்பணிக்க விரும்புவதாக திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

    உடல்நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சையை எளிதில் அணுகும் வகையிலும், குறைந்த செலவுடையதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகள் நோய்களுடன் போராடுவோர் மீதான ஆழ்ந்த ஒத்துணர்வில் வேரூன்றியிருந்தன.

    இன்று அவரை நாம் நினைவுகூரும்போது, அவர் கற்பனை செய்த சமூகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த சமூகத்தில் வணிகம் நன்மைக்கான சக்தியாக செயல்பட முடியும்; அந்த சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரின் திறனும் மதிப்புக்குரியது; அந்த சமூகத்தில் அனைவரின் நல்வாழ்விலும் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் அளவிடப்படும்.

    அவர் தொட்ட வாழ்க்கையிலும், அவர் வளர்த்த கனவுகளிலும் அவர் உயிர் வாழ்கிறார். இந்தியாவை சிறந்த, கனிவான, நம்பிக்கையான இடமாக மாற்றியதற்காக தலைமுறைகள் அவருக்கு நன்றியுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×