search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் எல்நினோ மாற்றம் காரணமாக இந்த ஆண்டு இயல்புக்கும் குறைவாகவே மழை பெய்யும்
    X

    இந்தியாவில் எல்நினோ மாற்றம் காரணமாக இந்த ஆண்டு இயல்புக்கும் குறைவாகவே மழை பெய்யும்

    • ஆண்டுக்கு சராசரி மழை அளவு என்பது 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அது மிகவும் குறைவான மழை என்பதை குறிக்கும்.
    • 90 முதல் 95 சதவீதத்திற்குள் மழை பெய்தால் அது இயல்புக்கும் குறைவான மழை பொழிவு ஆகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பருவ மழையை நம்பியே விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையின் அளவை பொறுத்தும், வான் மண்டலத்தில் உருவாகும் ஈரபதத்தின் அடிப்படையிலும் இந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவில் இயல்புக்கும் குறைவான அளவிலேயே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஸ்கைமேட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி 2023-ம் ஆண்டில் 94 சதவீதம் அளவுக்கே மழை பெய்யும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆண்டுக்கு சராசரி மழை அளவு என்பது 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அது மிகவும் குறைவான மழை என்பதை குறிக்கும்.

    இதுபோல 90 முதல் 95 சதவீதத்திற்குள் மழை பெய்தால் அது இயல்புக்கும் குறைவான மழை பொழிவு ஆகும். 96 சதவீதம் முதல் 104 சதவீதத்திற்கு மழை பெய்தால் அது இயல்பான மழை பொழிவு. 105 சதவீதம் முதல் 110 சதவீதம் அளவுக்கு மழை பெய்தால் அது இயல்பைவிட அதிக மழை பொழிவு எனக்குறிப்பிடப்படும்.

    இதன் அடிப்படையில் இந்தியாவில் இந்த ஆண்டு 94 சதவீதம் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஸ்கைமேட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது இயல்பை காட்டிலும் குறைவாகும்.

    இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை காட்டிலும் குறைவான மழை பொழிவு இருக்கும் என்பதற்கு காலநிலை மாற்றத்தில் ஏற்பட்ட தாக்கமே காரணம் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த ஆண்டு வறண்ட வானிலை காணப்படும். இதற்கு எல்நினோ மாற்றம் அதிகரித்து வருவதே காரணம். ஆசிய நாடுகள் இடையே வறட்சி அதிகரித்து வருவதும் பருவ மழை இயல்பை காட்டிலும் குறைவாக பெய்ய காரணம் என்று கூறியுள்ளது.

    பருவ மழை இயல்பை காட்டிலும் குறைவாக பெய்தால் அது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் அதற்கேற்ப அவர்கள் சாகுபடி பணிகளில் ஈடுபடவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது திடீரென பெய்த ஆலங்கட்டி மழை காரணமாகவும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×