search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர் போட்டியிட முடிவு?
    X

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர் போட்டியிட முடிவு?

    • சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது.
    • சசி தரூர் போட்டியிட்டால் சோனியா நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சோனியா தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து செப்டம்பர் 22-ந்தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30-ந்தேதி வரை மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் 17-ந்தேதி டெல்லியில் ஓட்டுப்பதிவு நடைபெறும். சுமார் 9 ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள். 19-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவு வெளியிடப்படும்.

    தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியை ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. மல்லிகார்ஜூன கார்கே, அசோக் கெலாட் உள்பட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிட செய்ய தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று ராகுல் காந்தி பிடிவாதமாக கூறி உள்ளார். பிரியங்காவையும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அவர் தடை விதித்துள்ளார். தங்கள் குடும்பத்தை சேராத ஒருவரை தலைவர் பதவியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராகுல் கூறி வருகிறார்.

    கடைசி வரை ராகுல் தனது மனதை மாற்றிக் கொள்ளாவிட்டால், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை தலைவர் தேர்தலில் களம் இறக்க சோனியா திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சோனியா, ராகுலை கடுமையாக எதிர்க்கும் ஜி-23 தலைவர்கள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். ஜி-23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஜிதின் பிரசாத் ஆகிய 3 பேரும் காங்கிரசில் இருந்து விலகி விட்டனர். எனவே எதிர்ப்பாளர்களில் 20 மூத்த தலைவர்கள் மட்டுமே உள்ளனர்.

    அவர்கள் காங்கிரஸ் கட்சியை சீரமைக்க தேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளனர். தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடும் பட்சத்தில் எதிர்த்து ஜி-23 தலைவர்களின் சார்பில் ஒருவரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். சசி தரூரை களம் இறக்க எதிர்ப்பாளர்கள் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

    கேரள நாளிதழ் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி சசிதரூர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் தலைவர் தேர்தலில் போட்டி உறுதி என்று சூசகமாக கூறியுள்ளார். இதற்கிடையே அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் சோனியா, ராகுல் மற்றும் அவர்களது ஆதரவு தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது. அவர் போட்டியிட்டால் சோனியா நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடந்தபோது சீதாராம் கேசரி, ராஜேஷ் பைலட், சரத் பவார் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். அப்போது சோனியா நிறுத்திய சீதாராம் கேசரி மொத்தம் உள்ள 7,460 வாக்குகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேஷ் பைலட்டும், சரத் பவாரும் 1,736 வாக்குகளே பெற்றனர். கடந்த 2000-ம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அப்போது சோனியாவுக்கும் ஜிதேந்திர பிரசாத்துக்கும் போட்டி ஏற்பட்டது.

    ஜிதேந்திர பிரசாத் வெறும் 94 வாக்குகள்தான் பெற்றார். சுமார் 7,500 வாக்குகள் பெற்று சோனியா வெற்றிபெற்றார். அதற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

    Next Story
    ×