search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருவனந்தபுரம் அருகே ஆண் வேடமணிந்து சென்று மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி காலை உடைத்த மருமகள்
    X

    திருவனந்தபுரம் அருகே ஆண் வேடமணிந்து சென்று மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி காலை உடைத்த மருமகள்

    • திருமணம் முடிந்த பின்னரும் பல வீடுகளில் கணவன், தனது தாயாரின் பேச்சை கேட்பதால் அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது வழக்கம்.
    • போலீசார், வாசந்தியின் மருமகள் சுகன்யாவை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்

    மாமியார்-மருமகள் இடையேயான சண்டை ஒரு காலத்திலும் ஓயாது.

    திருமணம் முடிந்த பின்னரும் பல வீடுகளில் கணவன், தனது தாயாரின் பேச்சை கேட்பதால் அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது வழக்கம்.

    இதில் அதிகம் பாதிக்கப்படுவது மருமகள்கள் தான். இதனால் அவர்களுக்கு கணவன் மீது ஏற்படும் ஆத்திரத்தை விட அவரை பெற்ற தாயார் மீதே அதிக கோபம் ஏற்படும்.

    இதனை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் சில இடங்களில் மருமகள் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு செல்லும் சம்பவங்கள் நடக்கும்.

    அவ்வாறு செல்லும் பெண்ணை, பெண்ணின் பெற்றோர் மறுபடியும் பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் விட்டு செல்வார்கள். அங்கு போனபின்பு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.

    இப்படிதான் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சுகன்யாவுக்கும் நடந்தது. இவரது கணவர், போதைக்கு அடிமையானவர்.

    இதனால் அவர் அடிக்கடி மனைவி சுகன்யாவுடன் தகராறில் ஈடுபட்டார். போதையில் இருந்த கணவரை சுகன்யா திட்டும் போது, அவரது மாமியார் வாசந்தி, சுகன்யாவை கண்டிப்பார். மாமியார், மகனை கண்டிக்காமல், தன்னை திட்டுவதால் அவர் மீது சுகன்யாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மாமியாருக்கு எப்படி பாடம் புகட்டலாம் என சுகன்யா யோசித்தபடி இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமியார் பால் வாங்க வீட்டில் இருந்து வெளியே சென்றார். காலை நேரம் என்பதால் வீட்டின் அருகே யாரும் இல்லை. சாலையிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

    அப்போது பேன்ட்,சட்டை அணிந்து கையில் இரும்பு கம்பியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மாமியார் வாசந்தியை வழிமறித்தார்.

    அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர், வாசந்தியை சரமாரியாக அடித்து உதைத்தார்.அதோடு இரும்பு கம்பியால் காலிலும் அடித்தார். இதில் வாசந்தியின் கால் எலும்பு முறிந்து ரத்தம் கொட்டியது. வலியில் அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் ஓடிவந்தனர். அவர்களை கண்டதும் வாசந்தியை தாக்கிய நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

    இதுபற்றி வாசந்தி, பாலராமபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வாசந்தியை தாக்கிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 40 கண்காணிப்பு கேமிரா காட்சிகைள கைப்பற்றி ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.

    இதில் வாசந்தியை தாக்கியது ஆண் அல்ல, ஆண் வேடமிட்ட பெண் என்பது தெரியவந்தது. அதிர்ந்து போன போலீசார், பெண் எதற்காக ஆண் வேடமிட்டு சென்று வாசந்தியை தாக்க வேண்டும் என ரகசியமாக விசாரிக்க தொடங்கினர்.

    இதில் மாமியாருக்கும், மருமகளுக்கும் மோதல் இருந்தது தெரியவந்தது. இதனை தெரிந்து கொண்ட போலீசார் வாசந்தியின் மருமகள் சுகன்யாவை அழைத்து விசாரித்தனர்.

    போலீசார் அழைத்ததுமே அவர்கள் தன்னை கண்டுபிடித்து விட்டனர் என்பதை தெரிந்து கொண்ட சுகன்யா, தான் ஆண்வேடமிட்டு சென்று மாமியாரின் காலை அடித்து உதைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போதையில் தகராறு செய்த மகனை கண்டிக்காமல், தன்னை திட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து போலீசார், வாசந்தியின் மருமகள் சுகன்யாவை கைது செய்தனர்.

    Next Story
    ×