search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா- அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதி
    X

    வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா- அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதி

    • ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
    • ஐதராபாத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    அமராவதி:

    குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

    ஆந்திராவில் என்.டி.ஆர்., கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இவை உள்பட 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 294 கிராமங்களில் வசித்து வரும் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கிருஷ்ணா நதிநீர் கரைபுரண்டு ஓடுவதால் பபட்லா மாவட்டத்தின் பிரகாசம் நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு ஆந்திராவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

    அங்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 17 குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் 100 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    கனமழையால் 62,644 ஹெக்டேர் நெல்பயிர்கள், 7,218 ஹெக்டர் பழத்தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக மாநில உள்துறை மந்திரி வெங்கலப்புடி அனிதா தெரிவித்தார்.

    ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.

    அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.

    மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மாநிலம் முழுவதும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் 99 ரெயில்களை ரத்து செய்தும், 4 ரெயில்களை பாதியளவு ரத்து செய்தும் தெற்கு மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. 54 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு உள்ளன.

    மழை வெள்ளத்தால் தெலுங்கானா எதிர்கொண்டு வரும் மோசமான சூழல் குறித்து அறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சென்னை, விசாகப்பட்டணம், அசாமில் இருந்து தலா 3 குழுவினர் ஐதராபாத் விரைந்தனர்.

    இந்த மாவட்டத்தில் சுமார் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சில மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வரை கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் மாயமாகினர்.

    இதனால் ஐதராபாத் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானாவில் ஐதராபாத், கம்மம் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

    பேச்சுவார்த்தையின்போது, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கு தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    Next Story
    ×