search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு

    • பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கலில் உடனடி முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.
    • மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ந்தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

    சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. தினமும் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கலில் உடனடி முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், பின்பு மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 16 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதன் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிவும் என்று கருதப்படுகிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பது நிம்மதி அளிப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜை முடிந்ததும் அன்று இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    அன்றை தினம் முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகிறது. ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×