search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாட்டில் நிலச்சரிவால்  சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்ல தடை
    X

    வயநாட்டில் நிலச்சரிவால் சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்ல தடை

    • பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம்.
    • மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அது மட்டுமின்றி மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

    அதே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன? என்பது தெரிவில்லை. அவர்களை தேடும் பணி 20 நாட்களுக்கு மேலாக நடந்தது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 1,200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இறுதிக்கட்டமாக நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்களை வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமானோர் என்ன ஆனார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் வர தொடங்கினர். கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு அமல்படுத்தப்பட்டதால் அவர்களின் வருகை அதிகரித்தது.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதி இடிந்தநிலையில் இருப்பதால், அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிலச் சரிவு பாதித்த இடங்களை பார்ப்பதற்கு வருகிறார்கள்.

    அதனை தடுக்கும் விதமாக முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வயநாடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பாலத்தின் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ கூறியிருப்பதாவது:-

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல பல்வேறு படைகளை சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள், தன்னார் வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம். மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    Next Story
    ×